சங்கடம் நீக்கி சகலமும் அருளும் சின்னாளப்பட்டியின் அதிசய முருகன் கோவில்

Update: 2022-12-17 00:45 GMT

தமிழகத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ளது சதுர்முக முருகன் கோவில். எந்தவொரு முருகன் கோவிலுக்கும் இல்லாத அதிசயம் இந்த கோவிலுக்கு உண்டு. ஆறுமுகம், ஒரு முகம் போன்ற திருமுகங்களில் காட்சி தரும் முருகன், இந்த கோவிலில் தான் நான்கு முகத்துடன் காட்சி தருகிறான். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அதிசயம் எனலாம்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், விஸ்வாமித்ரர் வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெரும் ஆசை கொண்டிருந்தார். ஆனால் அவரை பிரம்மரிஷி என ஏற்றுக்கொள்ள மறுத்தார் வசிஸ்டர். பிரம்மரிஷி பட்டத்தை பெறுவதற்கான வழி அறிய தீவிரமான தவத்தில் ஈடுபட்டார் விஸ்வாமித்ரர். அப்போது தோன்றிய சிவபெருமான் ஆதி பராசக்தியான பாலா திரிபுரசுந்தரியே இதற்கு தக்க வழிகாட்ட முடியும் என்றார். அதன் பின் அன்னையை எண்ணி தவம்புரிந்தார் விஸ்வாமித்ரர். அப்போது சலங்கை ஒலி கேட்கவே கண் விழித்து பார்த்தார். காலில் சலங்கையோடு சிறு பெண்ணொன்று அழகுற நின்றிருக்க கண்டார்.

தன்னுடைய தவ வலிமையால் வந்திருப்பது ஆதி பராசக்தியென்று உணர்ந்தார். அன்னையிடம் பிரம்மரிஷி பட்டம் பெறும் வழியை கேட்ட போது "விஸ்வாமித்ரா நீ பிரம்மரிஷி பட்டம் பெற என் நெற்றியில் திலகமிட்டால் நான் எளிய வழி சொல்வேன் " என அன்னை சொன்னாள். அதற்கென குங்குமம் தயாரித்து அன்னையின் நெற்றியில் திலகமிட்டார். அருகிலிருந்த குளத்தில் வைத்த திலகத்தை சரிபார்த்தாள் அன்னை. அதிலிருந்து உதிர்ந்த சில துகள்களிலிருந்து அழகிய திருமுகம் தோன்றியது, அதன் பின் அடுத்தடுத்தாக நான்முகத்தோடு முருகன் தோன்றினான். அவனை சதுர்முக முருகன் என அள்ளி கொஞ்சினாள் அன்னை.

விஸ்வாமித்ரரிடம் அன்னை சொன்னாள், அன்று என் துணையின்றி ஆறுமுகனை ஈசன் படைத்தார், இன்று அவர் துணையின்றி இந்த சதுர்முகனை நான் உருவாக்கியுள்ளேன். பிரம்மரிஷி பட்டத்திற்கான வழியை இனி முருகன் காட்டுவான் என்றாள்.

சிறு பிள்ளையாய் இருந்த நான்முக வேலனை கண்டு, நெக்குருகி நின்றார். பக்தி பரவசத்தில் கூத்தாடினார். அவரை காணக்காண அவருடைய அகந்தை அழிந்தது. அப்போது அருகாமையில் திண்டு போன்ற கற்களின் மழை பொழிந்தது, அந்த இட த்திற்கு வந்து சேர்ந்தால் அவர் விரும்பியது கிடைக்கும் என்று சொல்லி மறைந்தார் முருகன். அப்போது அந்த கல் மழை பொழிந்த இடத்திற்கு ஆடுமேய்க்கும் சின்ன ஆள் வடிவில் முருகனே வழிகாட்ட அந்த இடத்தை வந்தைடைந்தார் விஸ்வாமித்ரர் அந்த இடத்தில் ஆதிபராசக்தியும், முருகப்பெருமானும் ஒரு சேர தரிசனம் தரவே, அத்தரிசனத்தில் தன் அகந்தை முழுவதையும் இழந்து, பிரம்மரிஷி பட்டம் பெறவேண்டும் என்கிற தன்னுடைய ஆசையையும் இழந்தார். அப்பொழுதில் அத்திருத்தலத்தில் வாயிலில் இருந்த வசிஸ்டர் தன் வாயால் விஸ்வாமித்ரரை பிரம்மரிஷி என அழைத்தார்.

சங்கடங்கள் நீக்கும் சதுர்முக முருகன் இருக்கும் இந்த ஊர் சின்ன ஆளாக உருவெடுத்து முருகனே வழிகாட்டியமையால் சின்ன ஆள் பட்டி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் மருவி சின்னாளபட்டி என்றும், திண்டு போன்ற கற்களால் ஆன மழை பெய்ததால் திண்டுக்கல் என்றும் பெயர் வந்தது

Tags:    

Similar News