இராமகிருஷ்ணர் வாழ்ந்த தக்‌ஷிணேஷ்வர காளி கோவில் குறித்த ஆச்சர்ய கதை !

Update: 2021-11-11 00:30 GMT

தக்‌ஷிணேஷ்வர காளி கோவில் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள தக்‌ஷிணேஷ்வரத்தில் அமைந்துள்ளது. இது ஹூக்லி ஆற்றின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு குடி கொண்டிருக்கும் அன்னைக்கு பவதாரணி என்று பெயர். லெளகீக வாழ்விலிருந்து முக்தி தருபவள் என்று பொருள். இக்கோவில் ராணி ராஸ்மொனி என்பவர்ரால் 1855 இல் கட்டப்பட்டது. இந்த கோவில் இராமகிருஷ்ண பரமஹம்சருடன் தொடர்புடையது ஆகும்.

இந்த வளாகத்தினுள் பன்னிரண்டு கோவில்கள் உள்ளன, சிவன், காளி, ராணி, ராதே கிருஷ்ணா மற்றும் ராஸ்மொனி உள்ளிட்டவர்களுக்கு இங்கே தனித்தனி கோவில்கள் உண்டு. சிவன் கோவிலுக்கு இறுதியில் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள நவஹத் கானா எனும் இடத்தில் தான் இராமகிருஷ்ணர் தன் வாழ்வின் முக்கியமான ஒரு காலகட்டத்தை கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் வங்காள கட்டிடக்கலையின் அம்சத்தில் கட்டப்பெற்ற ஒன்றாகும். மூன்று அடுக்கில் தென்புறம் பார்த்தவாறு இந்த கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் கர்பகிரஹத்தில் இருக்கும் அன்னை பவதாரணி சிவனின் நெஞ்சில் இருப்பதை போலவும், இந்த இரு திருவுருவமும், வெள்ளியால் ஆன ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருப்பது போலவும் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வட கிழக்கில் அமைந்துள்ளது தான் விஷ்ணுவுக்கான அல்லது ராதே கிருஷ்ணருக்கான திருக்கோவில்.

புராண கதைகளின் படி, ராணி ராஸ்மோனி அன்னையின் தீவிர பக்தை ஆவார். அன்னை பார்வதியை தரிசிக்க காசி நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். தன் உறவினர், பணியாட்கள் மற்றும் தேவையான பொருட்கள் என அனைத்தையும் ஏற்றி செல்ல ஏதுவாக 24 படகுகளை தயார் செய்தும் வைத்திருந்தார். அவர் யாத்திரையை ஆரம்பிக்கும் முதல் நாள் இரவு அவருக்கு ஒரு கனவு வந்ததாகவும்.

அதில் தேவி காளி தோன்றி, தன்னை தரிசிக்க பனராஸ் நகரத்திற்கு செல்ல தேவையில்லை. கங்கை நதிக்கரையோரத்திலே தனக்கென ஒரு கோவிலை கட்டி அங்கே வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும். அவ்வாறு செய்தால் தானே அங்கு தோன்றி அந்த வழிபாடுகளை ஏற்று கொள்வதாகவும் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.

அதன்படியே ராணி தக்‌ஷிணேஷ்வரத்தில் ஓர் இடத்தை வாங்கி 1847 - 1855 ஆம் ஆண்டிற்குள் இந்த கோவிலை கட்டிமுடித்துள்ளார். 1855 ஆம் ஆண்டு இந்த கோவிலின் விழாவின் போது நாடெங்கும் இருந்து 1 இலட்சம் அந்தணர்கள் விழாவை சிறப்பிக்க அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:    

Similar News