ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருவானைக்காவல் மிகவும் பிரபலமான சிவாலயம். தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவாலாயங்களில் பஞ்சபூத ஸ்தலங்களாக கருதப்படும் ஐந்து கோவில்களில் இது நீரினை குறிக்கும் ஸ்தலமாக அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இந்த கோவில் 60 ஆவது தலமாக பாடப்பெற்றுள்ளது.
இது குறித்து பலவிதமான வரலாறு சொல்லப்படுவதுண்டு, பெரும்பாலன வரலாற்று புராணங்கள் உணர்த்துவது யாதெனில், ஒரு சில காரணங்களுக்காக அம்பிகை பார்வதி அகிலாண்டேஸ்வரி ரூபம் கொண்டு இங்கே வந்து நாவல் மரத்தின் கீழ் அமர்ந்து தீவிர தவத்தில் ஈடுபட்டார். அவரின் வழிபாட்டிற்காக சிவலிங்கம் அமைக்க சித்தம் கொண்ட அம்பிகை. இந்த தலத்திற்கு அருகே ஓடும் காவேரியிலிருந்து நீர் எடுத்து லிங்கம் வடித்தார். தேவியின் கைகளில் இருந்து வழிந்த நீர் லிங்கமாக மாறியது. அம்பிகையின் தவத்தை மெச்சி, அய்யன் சிவபெருமான் பார்வதி தேவிக்கு தரிசனம் நல்கினார். மேலும் மேற்கு திசையில் நின்ற சிவபெருமான் கிழக்கில் இருந்த அகிலாண்டேஸ்வரி அம்மைக்கு சிவ ஞானத்தை போதித்த இடமாகவும் இந்த தலம் கருதப்படுகிறது.
அகிலாண்டேஸ்வரி தேவி, அய்யனை உச்சிகாலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே இங்கே மதிய வேளையில் பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் போன்றவைகளை அணிந்து, மேள தாளங்கள் முழங்க யானை முன்னே செல்ல ஜம்புகேஸ்வரர் சந்நிதி செல்வார். அங்கே பெருமானுக்கு அபிஷேகம் முடித்து பின் கோமாதா பூஜை செய்து அம்பாள் சந்ந்தி திரும்புவார். இந்த பூஜையை காண தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த வேளையில் அர்ச்சகரை அம்பாளாகவே கருதி வழிபடுகின்றனர். மேலும் அம்பாள் செய்யக்கூடிய கோபூஜைக்கு பிரத்யேகமாக கரும்பசு வழிபடப்படுகிறது.
தினசரி அய்யனுக்கு இங்கே அன்னாபிஷேகம் நடக்கிறது. இந்த கோவில் நாதஸ்வரம் கலையை கற்றுக்கொடுப்பதில் பெரும் பெயர் பெற்றது. மேலும் இங்குள்ள அம்பிகை காதில் அணிந்திருக்கும் குண்டலம் மிகவும் பெரிய வடிவில் பக்தர்களுகு எளிதில் காட்சி தருவதான அமைப்பில் அமைந்துள்ளது. இந்த குண்டலத்தை தாடங்கம் என அழைக்கின்றனர். இந்த தாடங்கத்தை அன்னைக்கு ஆதிசங்கரர் அர்பணித்தார் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில் சந்நிதி எதிர்புறமாக அமைக்கப்பட்டிர்க்கும். இது போன்ற தலங்களை உபதேச தலம் என அழைப்பது வழக்கம். அதாவது குருவும் மாணவரும் எதிரேதிரே அமர்ந்திருப்பதை போன்ற அமைப்பு. இங்கே அன்னை மாணவியாகவும், அய்யன் குருவாகவும் இருக்கிறார். மற்ற சிவாலயங்களை போல இங்கே சிவன் பார்வதிக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுவதில்லை