நீதிமன்ற பிரச்சனைகள் தீர்க்கும் சரபேஸ்வரர் அருள்பாலிக்கும் அதிசய கோவில்

அருள்மிகு கம்பகரேஸ்வரர் ஆலயம், திருப்புவனம்

Update: 2023-01-20 00:30 GMT

நீதிமன்ற பிரச்சனைகள் தீர்க்கும் தலம். சிவனின் அரிதிலும் அரிய ரூபமான சரபேஸ்வரர் இருக்கும் அதிசய கோவில்

தமிழகத்தின் நெல் களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் திருபுவனம் எனும் பகுதியில் அமைந்துள்ளது புகழ் பெற்றா கம்பகரேசுவரர் ஆலயம். மயிலாடுதுறை – கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம் இது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கோவில்களின் வரிசையில் முக்கியமானது இந்த கோவில்.

சோழர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், ஐராவதீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றின் வரிசையில் சொல்லப்படும் கோவில் இது. மேலும் தேவாரம் வைப்பு ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கிருக்கும் மூலவருக்கு கம்பகரேசுவரர், நடுக்கம் தீர்த்த நாயகன், திருபுவனயீஸ்வரர், போன்ற பல பெயர்கள் உண்டும். இங்கிருக்கும் அம்பாளுக்கு தர்மசம்வர்த்தினி என்றும் அறம் வளர்த்த நாயகி என்பதும் பெயராகும்.

இக்கோவிலின் ஆச்சர்யம் யாதெனில் இங்கே சிவபெருமானின் அரிய கோலமான சரபேசுவரருக்கு தனி சந்நிதி உண்டு. நீதிமன்ற பிரச்சனைகள், பில்லி சூனிய பிரச்சனைகள், தீராத நோய், மனக்குறைகள் ஜாதக, கிரக தோஷம் என சகல பிரச்சனையும் தீர்க்கும் வல்லவர் இவர். மேலும் இங்குள்ள மூலவர் நடுக்கம் தீர்த்த நாயகர் என்பதால் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட நோய்கள் குணமாகிறது.

சரபேசுவரர் என்பது சிவன், பெருமாள், பிரத்யங்கரா தேவி மற்றும் துர்கை ஆகிய நான்கு அம்சங்களின் ஒன்று சேர்ந்த தன்மையாகும். சமஸ்கிருத இலக்கியங்களின் படி சரபேசுவரருக்கு சிங்க ரூபம், பறவையின் இறகு, எட்டு கால்கள் ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது. யானையை காட்டிலும் பலம் பொருந்தியவராக பராக்கிரமசாலியாக திகழ்கிறார். இரண்ய வதத்தின் போது நரசிம்ம அவதாரம் விடைபெறும் போது நரசிம்மரை சாந்தப்படுத்தியவர் சரபேசுவரர் என சொல்லப்படுகிறது. நான்கு அம்சங்களும் ஒரு ரூபத்தில் காட்சி தருவதால் இவரை வணங்கினால் நால்வரை வணங்கிய பலன்கிடைக்கிறது.

மேலும் இத்தலம் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், பாண்டிய மன்னன் ஒருவன் போருக்கு சென்ற போது அவனுடைய குதிரை ஒரு அந்தணரின் உயிரை எடுத்து விடுகிறது. இதனால் பிரமஹத்தி தோஷம் பிடித்த மன்னன் திருவிடை மருதூர் செல்கிறார். அங்கே அவரை பிடித்த தோஷம் கிழக்கு திசையில் ஒதுங்குகிறது. இதனையடுத்து திருபுவனம் வரும் போது மீண்டும் அந்த தோஷம் வந்து தன்னை பிடிக்குமோ என மன்னன் நடுங்குகிறான். அவனுடைய நடுக்கத்தை தன் அருளால் போக்கியவர் திருபுவன ஈஸ்வரர் என்பதால் அவருக்கு நடுக்க தீர்த்த நாயகன் என்பது திருப்பெயராக அமைந்தது.

Tags:    

Similar News