காஞ்சியின் சித்திரகுப்தர் ஆலயம். எதிர்பார்த்த வரவு செலவை அருளும் அதிசயம்
தமிழகத்தில் திருக்கோவில்கள் நிறைந்த ஆன்மீக பூமியான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது இந்த வித்யாசமான கோவில். காஞ்சிபுரத்தில் நெல்லுக்கார வீதியில் அமைந்துள்ளது சித்திரகுப்தர் ஆலயம். இது இந்து திருக்கோவில்களில் அரிய கோவில்களின் வரிசையில் ஒன்றாகும். யமதர்ம ராஜரின் கணக்கராக அறியப்படுபவர் சித்திரகுப்தர். மனிதர்கள் செய்யக்கூடிய நல்லது மற்றும் தீயவைகளை கணக்கில் கொண்டு மனிதர்களின் பிறப்பு மற்றும் இறப்பை நிர்வகிப்பவர் இவர் ஆவார்.
இந்த இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் சோழ பேரரசில் கட்டப்பெற்றது. காஞ்சியின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களுள் இக்கோவில் முக்கியமானதாகும்.
புராணங்களின் படி, அழித்தலின் கடவுளான சிவபெருமான் தர்மங்களை நிர்வகிப்பதை குறித்தும், மனிதர்கள் செய்யும் நன்மை தீமைகளை கணக்கில் கொள்வதை பற்றியும் பேசிவந்தார். நல்லவைகளை வரவில் வைத்து, மனிதர்கள் செய்யும் தீமையை கணக்கில் வைக்க ஒருவர் வேண்டும் என்று அவர் விரும்பினார். இதை மனதில் கொண்டே சிவபெருமான் ஒரு அழகான் படத்தை தங்க தகடில் வரைந்தார். மிகவும் பேரெழில் வாய்ந்த படமாக அது இருந்தது. சிவன் மற்றும் பார்வதியின் தெய்வீக அருளால் அந்த படம் உருவம் கொண்டது. அவருக்கு மனிதர்கள் செய்யும் நல்ல வினை மற்றும் தீய வினையை கணக்கில் கொள்ளும் பணி வழங்கப்பட்டது. சித்திரம் ( படம்) சித்திரத்தில் இருந்து தோன்றிய கணக்கர் ( குப்தர்) என்பதாலேயே அவருக்கு சித்திர குப்தர் என்ற பெயர் வந்தது.
இதுமட்டுமின்றி சித்திரகுப்தர் குறித்து மற்ற சில புராணக்கதைகளும் நம் குறிப்புகளில் கிடைக்கின்றன. இந்திரனுக்கு பிள்ளை வரம் இல்லை, ஆனாலும் அவருக்கும் குழந்தை வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்ற புனித பசுவான காமதேனு மூலம் சித்திரகுப்தர் இந்திரனின் மகனாக வளர்ந்தார் என்றொரு வடிவமும் உண்டு.
இக்கோவில் மூன்றடுகு இராஜகோபுரத்தை கொண்டது. இதன் மைய சந்நிதியில் சித்திர குப்தர் அமர்ந்த கோலத்தில் தனது வலது கையில் எழுத்தாணி உடனும், இடது கையில் ஏடுகளுடனும் காணப்படுகிறார். ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் இங்கே சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக சித்திரா பெளர்ணமியில் மிகவும் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இவரை பின் தொடரும் சந்ததியினர் கயஸ்தா சமூகம் என அழைக்கப்படுகிறார்கள். சித்திரகுப்தர் கேதுவின் அதிதேவதை ஆவார். எனவே கேதுவால் ஜாதகத்தில் பிரச்சனை இருப்பின் சித்திரகுப்தரை வழிபட நீங்கும் என்பது நம்பிகை. மற்றும், சித்திரகுப்தர் பூஜை செய்யும் போது அவருக்குரிய மந்திரத்தை சொல்லி, தங்கள் பெயர், விலாசம், பூஜை செய்யும் நாளின் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு நமது வரவு மற்றும் செலவினை காகிதத்தில் எழுதி அவர் முன் வைத்து வணங்கி வர. வரும் ஆண்டுகளில் சித்திரகுப்தரின் ஆசியுடன் எதிர்பார்த்த வரவும் செலவும் கிட்டும் என்பது நம்பிக்கை.