கர்ம வினை நீக்கும் கார்த்திகை தீபம்! ஏற்றுவது ஏன்? இன்று ஏற்ற உகந்த நேரம் எது?
அழகென்றால் நிலவு. நிலவுகளில் அழகு பெளர்ணமி நிலவு. அதுவும் இந்த கார்த்திகை மாதத்து பெளர்ணமி இந்து மரபில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மிகவும் புனிதமானது. மற்ற நாட்களில் ஏற்றும் விளக்கிற்கும் கார்த்திகை மாதத்தில் ஏற்றும் விளக்கிற்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம் என்ன?
கார்த்திகை மாதத்து முழு நிலவில் ஏற்றும் விளக்கு வெறும் வெளிப்புற இருளை நீக்குவதாக இல்லாமல். ஒருவரின் உள்நிலையில் இருக்கும் அறியாமை இருளை அகற்றும் தன்மை கொண்டது. மேலும் கார்த்திகை என்பது முருக பெருமானோடும் தொடர்புடையது. தீமையை எதிர்த்து சூரனை வதைத்த முருக பெருமான் ஆயுதமாக ஏந்தியது அவருடைய உட்சபட்ச கவனத்தை தான். அந்த உட்சபட்ச ஒளியை, கவனத்தை தர வல்லது கார்த்திகை தீபம்.
இந்த தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்படுவதன் சிறப்பு என்ன? திருவண்ணாமலை சிவபெருமான் பஞ்ச பூத ஸ்தலங்களுள் ஒன்று. பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை குறிக்கும் இடம் இது. நெருப்பு என்பது ஒருவரின் ஞானம், அறிவு, மற்றும் விழிப்புணர்வின் அடையாளம். இந்த கார்த்திகை நன்நாளில் எழும் நுட்பமான ஒளி, விழிப்புணர்வோடும், கவனத்தோடும் எதிர்பார்ப்பில்லா பக்தியோடும் இருப்பவர்களின் கர்ம வினைகளை அழிக்கிறது என்பது தார்பரியம். அதன் குறியீடாகவே, மலையின் உச்சியில் மிகப்பெரிய தீபம் ஏற்றப்படுகிறது.
அடிப்படையில் தீபம் என்பது ஆற்றல். தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் அது சிறிதோ பெரிதோ, அந்த தீபத்தை சுற்றிய இடம் சுத்திகரிக்கப்படுகிறது. நேர்மறை ஆற்றல் அவ்விடத்தில் படர்கிறது. தீபமும் அதில் எரியும் சுடரும் நமக்குள் இருக்கும் கவனசிதறல்களை அடக்கி மனதை ஒருநிலைப்படுத்த துணை செய்கிறது. ஓர் அகல் இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்தும் போது, வீடுகள் தோறும், நம் நாடெங்கும் ஏற்றப்படும் இவ்விளக்குகளால் மொத்த சூழலும் நேர்மறையாக மாறுகிறது என்பது நம்பிக்கை.