ஆயிரமாண்டு பழமையான சப்தகன்னியர் வணங்கிய ஆச்சர்ய கடம்ப வனேஸ்வரர் ஆலயம்!

ஶ்ரீ கடம்ப வனேஸ்வரர் ஆலயம்

Update: 2022-02-08 01:50 GMT

ஶ்ரீ கடம்ப வனேஸ்வரர் ஆலயம் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ளது. கிட்டதட்ட ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த கோவில். இங்கிருக்கும் மூலவரின் பெயர் கடம்ப வனேஸ்வரர், அம்பிகைக்கு முற்றில்லா முலையம்மை என்று பெயர். இங்கிருக்கும் உற்சவர் சோம ஸ்கந்தர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

இக்கோவிலின் சிறப்பம்சம் யாதெனில், இங்கிருக்கும் பெருமான் சுயம்புவாக தோன்றியவர், மற்றும் சப்த கன்னிகள் இவரை வணங்குவதை போல அமைக்கப்பட்டிருக்கிறது. குளித்தலை எனும் பகுதி மிகவும் புராண தொன்மம் கொண்டதாகும் இந்த பகுதியில் கடம்ப மரங்கள் அதிகம் இருந்தபடியால் இந்த பகுதி கடம்பந்துறை, குழித்தண்டலை, கடம்பை, கடம்பவனம், கடம்பந்துறை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கிருக்கும் பெருமான் கடம்ப மரத்தில் தன் தரிசனத்தை நல்கியதால் கடம்ப வனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயரும் உண்டு. இத்தலம் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், ஒரு காலத்தில் தூம்ரலோச்சனன் எனும் அரக்கன் கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனை அழிக்க வந்த அம்பிகை அவன் பெற்றிருந்த வரத்தின் வலிமையால், அவனை முழுமையாக எதிர்க்க முடியாமல் தடுமாறினார். அப்போது அம்பிகையின் துணைக்கு சப்த கன்னியர் வந்தனர். சப்த கன்னியர் வருகைக்கு பின் ஓட்டமெடுத்த அரக்கனை துரத்தி சென்ற சப்த கன்னியர் அரக்கனுக்கு பதிலாக ரிஷி ஒருவரை வதைத்தமையால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அந்த தோஷம் நீங்க அவர்கள் வழிபட்ட தலம் இது. அதுமட்டுமின்றி சிவபெருமானே அந்த அரக்கனை அழிக்க உதவி, அந்த சப்த கன்னியருக்கு அரணாக இருந்து அவர்களை இத்தலத்தில் காத்தார். அவர்களுக்கான தரிசனத்தை கடம்ப மரத்திலேயே வழங்கினார் என்பது வரலாறு.

இந்த சப்த கன்னியரில் ஒருவரான சாமுண்டி என்பவர், துர்கையின் மறுவடிவம் ஆவார். எனவே துர்கைக்கு என்று இங்கே தனி சந்நிதி கிடையாது. மூலவர் இருக்கும் கர்பகிரஹத்திலேயே ராகு காலத்தில் துர்கைக்கு செய்யப்படும் பூஜையும் செய்யப்படுவது இக்கோவிலின் மற்றொரு விஷேசமாகும்.

Tags:    

Similar News