மகாமகம் குளத்தில் நீராடுவதால் ஏற்படும் அதிசய பலனும் ஆச்சர்ய பின்புலமும்

Update: 2022-09-15 00:30 GMT

தமிழகத்தை சேர்ந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது ஆதி கும்பேஸ்வரர் ஆலயம். இங்கு சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரராகவும் பார்வதி தேவி மங்களாம்பிகை அம்மனாகவும் காட்சி தருகிறார். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது.

இந்த கோவிலின் கிழக்கு கோபுரம் 11 அடுக்குகளையும் 128 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த கோவிலினுள் ஏராளமான சிறு சந்நிதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கோவிலின் சிறப்பம்சமாக கருதப்படுவது விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பெற்ற 16 தூண்களை மண்டபமாகும். இந்த மண்டபத்தில் 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 இராசிகளின் உருவம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

ஆறு கால பூஜையை கொண்ட இத்திருத்தலத்தில் மாசி மகம் பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தற்போதிருக்க கூடிய அமைப்பு சோழ பேரரசுகளாலும், பின் விஜயநகர பேரரசுகளால் இக்கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

பெரும்பாலான சிவாலயங்களில் அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் தனித்தனி சந்நிதிகளே இருக்கும். ஆனால் இங்கு இருவரும் ஒரு சேர அருள் பாலிக்கின்றனர். இது இக்கோவிலின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். இந்த கோவில் இருக்கும் நகருக்கு கும்பகோணம் என்று பெயர், இந்த பெயர் கும்பேஸ்வரரின் ஆலயத்தினாலே வந்தது எனவும் சொல்லப்படுகிறது. ஒரு முறை பிரளயத்தால் உலகம் அழிய நேர்ந்த போது பிரம்ம தேவர் தனது படைப்புத் தொழில் என்னாகுமோ என அஞ்சினார். அப்போது சிவபெருமான் பிரம்ம தேவரிடம் புண்ணிய பூமிகளின் மண்ணெடுத்து அதோடு அமுதத்தை கலந்து ஒரு கும்பத்தை செய்திடுக. அதில் படைப்புக்கான கலன்களை சேமித்டு வைக்குமாறும் கூறினார்.

அந்த கும்பம் பிரம்ம தேவர் அஞ்சியதை போலவே பிரளயத்தில் அடித்து செல்லப்பட்ட போது சிவபெருமான் ஏய்த அம்பினால் அது ஓரிடத்தில் நின்றது. அந்த இடம் தான் கும்பகோணம் என்பது ஐதீகம். அந்த அமுதத்துளிகள் இரு இடங்களில் விழுந்தது எனவும் அந்த இடமே மகாமகம் குளம் மற்றும் பொற்றாமரை குளம் என்றும் அழைக்கப்படுகிறது.

மகாமகம் குளம் என்பது 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த குளம். இங்கே நீராடுபவர்களுக்கும் அவர்களை சேர்ந்த ஏழு தலைமுறையினருக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கிருக்கும் மங்களாம்பிகை கோவில், சக்தி பீடங்களுள் முதன்மையானதாக திகழ்கிறது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பாக இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

Tags:    

Similar News