கூர்ம அவதாரத்தில் அருள் நல்கும் ஒரே கோவில் கூர்மநாத சுவாமி திருக்கோவில்

Update: 2022-02-02 00:15 GMT

ஆந்திர பிரதேசம் ஶ்ரீகாகுலம் மாவட்டத்தில் ஶ்ரீ கூர்மம் கிராமத்தில் அமைந்துள்ளது ஶ்ரீ கூர்மநாத சுவாமி கோவில். இக்கோவிலுக்கு ஶ்ரீகூர்மம் கோவில் என்ற பெயரும் உண்டு. விஷ்ணு பெருமானின் இரண்டாம் அவதாரமான கூர்ம அவதாரத்திற்கு அர்பணிக்கப்பட்ட திருத்தலம் இதுவாகும். இங்கிருக்கும் இலட்சுமி தேவிக்கு கூர்மநாயகி என்று பெயர்.

14 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கோவில்களில் கூர்ம அவதாரத்திற்கென்றே அர்பணிக்கப்பட்ட ஒரே கோவில் இது தான். கூர்ம அவதாரத்தின் திருவுருவமும், மஹா விஷ்ணு மற்றும் இலட்சுமி தேவியின் திருவுருவம் ஆகிய இரு வகைப்பட்ட தரிசனத்தையும் இங்கே காணலாம். விசாகப்பட்டிணத்திலிருந்து 130 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.

இந்த பகுதியை சுவேத சக்ரவர்த்தி என்பவர் ஆண்டு வந்தார். அதனாலேயே இந்த மலைக்கு சுவேத கிரி என்று பெயர். இவருடைய மனைவியான விஷ்ணு ப்ரியா மஹா விஷ்ணுவின் தீவிர பக்தையாவார். ஒரு முறை அவர் ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்த போது, அவரை நெருங்க முற்பட்டார் அவர் கணவர். எவ்வளவு தடுத்தும் அவரை தடுக்க முடியாததால் மஹா விஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தார். அப்போது உண்டான ஒரு நதி அவர்கள் இருவரையும் பிரித்தது. அந்த ஆற்றின் வெள்ளத்திலேயே இழுத்து செல்லப்பட்டார் சுவேத சக்ரவர்த்தி அவரை பின் தொடர்ந்து சென்றார் விஷ்ணு ப்ரியா. இந்த நிகழ்வால் உடல் நலம் குன்றியிருந்த சுவேத சக்ரவர்த்தியிடம் நாரத முனி கூர்ம நாராயண மந்திரத்தை உபதேசம் செய்து வழிபட சொன்னார். அதன்படியே சுவேத சக்ர்வர்த்தியும் வழிபட்டார். அவர் பக்தியில் மெச்சிய விஷ்ணு கூர்ம அவதாரத்திலேயே அவருக்கு தரிசனம் நல்கினார். மேலும் விஷ்ணுவை எண்ணி அவர் மூழ்கி எழுந்த தீர்த்தம் இன்றும் சுவேத புஷ்கரிணி என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலின் உற்சவரான கோவிந்தராஜ சுவாமி மற்றும் அவரின் துணைவியாரான ஶ்ரீதேவி மற்றும் பூதேவி 12 ஆம் நூற்றாண்டில் சுவேத புஷ்கரணியில் கண்டெடுக்கப்பட்டவர்கள். இங்கு பல சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளன. இங்கு மூலவராக இருக்கும் கூர்மநாத சுவாமி திருவுருவம் கருங்கல்லால் ஆனது. இருப்பினும் தினசரி சந்தனகாப்பு செய்தமையால் இன்று இத்திருவுருவம் மஞ்சள் நிறத்தில் மின்னும் அதிசயத்தை நாம் காணலாம்.

Tags:    

Similar News