அமுதத்துளிகளில் உருவான லிங்கம்!ஆயிரமாண்டு அதிசயம் வாய்ந்த குழகர் ஆலயம்

Update: 2022-07-23 02:33 GMT

குழகர் கோவில் அல்லது கோடிக்குழகர் கோவில் எனும் ஆலயம் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடிக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட இந்த திருத்தலத்தில் மூலவரின் பெயர் அமுதகடேஸ்வரர் அல்லது குழகேஸ்வரர் என்பதாகும். அம்பாளுக்கு அஞ்சானாக்‌ஷி மற்றும் மைத்தடங்கண்ணி என்ற திருப்பெயரும் உண்டு. இந்த கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இந்த கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. குழகர் கோவில் மூன்று பிரகாரங்களை கொண்டது. அதில் கருவறையில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் அருள் பாலிக்கிறார். கூடுதலாக கணபதி, முருகன், நந்தி, நவகிரகங்கள் உள்ளிட்டவர்களுக்கு தனி சந்நிதியும், திருவுருவமும் உண்டு.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணம் யாதெனில், தேவர்களும் அசுரர்களும் அமுது வேண்டி பாற்கடலை கடைந்த போது, கிடைத்த அமுதத்தை பாதுகாக்கும் விதமாய் தேவர்கள் அமுத கலசத்தை வாயு தேவனிடம் ஒப்படைத்து அதை பத்திரமாக வைக்கும் படி கூறினார். அந்த அமுத கலசத்தை வாயு எடுத்து கொண்டு புறப்பட்ட போது அரக்கர்கள் உருவாக்கிய சுராவளி காற்றினால் அந்த கலசம் சற்று சாய்ந்து அதிலிருந்து சிலத் துளி அமுதம் கீழே சிந்தியது. அந்த அமுதிலிருந்து தோன்றிய லிங்கம் தான் இங்கு மூலவராக இருக்கிறார் என்பது நம்பிக்கை. அதனாலேயே இவருக்கு அமுதகடேஸ்வரர் என்ற திருப்பெயர்.

மேலும் இங்கே விழுந்த அமுதத்துளிகளில் சிலவற்றை முருக பெருமான் ஏந்தினார் என்பதால் இங்குள்ள முருக பெருமானுக்கு அமிர்த சுப்ரமணியர் என்று பெயர், மற்றும் இங்குள்ள விநாயகருக்கு அமிர்த விநாயகர் என்று பெயர், மற்றும் இக்கோவிலின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது

அதுமட்டுமின்றி இராம காதையில், சீதையை தேடி இராமர் பயணம் மேற்கொண்ட போது இங்கிருக்கும் சிவபெருமானை வழிபட்டதற்கான பதிவுகள் புராணத்தில் உண்டு. இராவணனை வதைக்க பாலம் அமைக்க உத்தேசித்த போது முதலில் கோடிக்கரையிலிருந்தும் பாலம் அமைக்கப்பட்ட பரிசீலிக்கப்பட்டதாகவும், அது இலங்கையிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் என்பதால் ஶ்ரீ ராமர் தனுஷ்கோடியில் இருந்து பாலம் அமைத்ததாகவும் சொல்கின்றனர்.

இராம பிரான் இங்கே வந்ததை குறிக்கும் விதமாக அவருடைய கால்தடம் இங்கே வழிபடப்படுகிறது. கோவிலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அந்த காலத்தடம் அமைந்துள்ளது. நாரதர், இந்திரன், குழக முனிவர் சேக்கிழார், அருணகிரி நாதர், சுந்தரர் இன்னும் எண்ணற்ற சித்தர்கள் வந்து வணங்கிய ஆயிரம் காலத்து அதிசயம் இந்த திருக்கோவில்.

Tags:    

Similar News