மகேந்திரபள்ளி திருமேனி அழகர் கோவில் தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மகேந்திரபள்ளி எனும் இடத்தில் அமைந்துள்ளது. கொல்லிடத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் இக்கோவில் உள்ளது. இங்கிருக்கும் மூலவருக்கு திருமேனி அழகர் என்றும் அம்பாளுக்கு வடிவாம்பிகை என்றும் பெயர். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். குறிப்பாக சொன்னால் காவேரியின் வடக்கில் இருக்கும் சோழநாட்டில் 6ஆவதாக பாடல் பெற்ற தலம் இது.
இந்த கோவில் 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சோழர்களால் 10 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் அருகிலிருந்த பிச்சாவரம் ஜமீன் கோட்டையை ஆங்கிலேயர்கள் தகர்த்துவிட்டனர் என்றும். அந்த கோட்டை ஒருகாலத்தில் தீவு கோட்டை என்று அழைப்பட்டதாகவும் குறிப்புகள் சொல்கின்றன. அந்த கோட்டையிலிருந்த நடராஜர் திருவுருவம் இன்று கோவிலில் இடம்பெற்றுள்ளது என்று ஒரு சாரர்.
இக்கோவிலின் தனிச்சிறப்பாக இங்கிருக்கும் மூலவர் மீது பங்குனி மாதம் முதல் வாரத்தில் சூரியஒளீ விழுகிறது. இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், ஒரு முறை இந்திரன் கவுதம மகரிஷியின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டான். இதனால் உடம்பெல்லாம் கண்ணாக மாறும்படி சாபம் பெற்றான். இந்த சாபம் நீங்க இந்திரன் பல இடங்களில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தான். அதில் ஒரு தலம் தான் இது. அவன் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான் பார்வதி தேவியுடன் அழகே வடிவாக இங்கே காட்சிக்கொடுத்தார் என்கிறது புராணம்.
வழக்கத்தை விட இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானும், பார்வதி தேவியும் அழகில் மிளிர்வதால் அவர்களை பெருமாளுக்கே உரிதான அழகர் என்ற சொல்லை சொல்லி விழித்தார் ஞானசம்பந்தர். இது அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி முக பொலிவும், அழகும் வேண்டுபோர், இங்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
அனைவருக்கும் மகா பெரியவனான இந்திரன் வந்து தொழுத இடம் என்பதால் இந்த இடத்திற்கு மகா இந்திர பள்ளி என்ற பெயர் வந்தது. அதுவே மருவி மகேந்திரபள்ளி என்றானதாக சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி மகாபாரத போர் நடப்பதற்கு முன்பாக கண்ண பிரான் இங்கிருக்கும் "மகேந்திர புஸ்கரினி" என்றழைக்கப்படும் தீர்த்தக்கரையில் தர்ப்பணம் வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் சூரிய சந்திர தோஷம் இருப்பவர்கள் இந்த தீர்த்தக்கரையில் நீராடி இறைவனை தொழுது வர வினைகள் நீங்கும்.