கேரளாவில் மீனாட்சியின் மறு அவதாரம். மீன்குளத்தி அம்மன் கோவில் அதிசயம்!

மீன்குளத்தி பகவதி கோவில், பாலக்காடு

Update: 2022-02-17 00:30 GMT

மீன்குளத்தி அம்மன் கோவில் கேரளா மாநிலம் பாலகாடு மாவட்டத்தில் பள்ள சேனா எனும் இடத்தில் அமைந்துள்ளது. பள்ளசேனா பகுதியின் மிகவும் பழமையான கோவில் இதுவாகும்.

இக்கோவிலில் இருக்கும் மீன் குளத்தி அம்மன் மதுரை மீனாட்சியின் மறு அவதாரம் என சொல்லப்படுகிறது. இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள சிதம்பரத்தில் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது அங்கிருந்த மக்கள் பிழைப்பு தேடி மாற்று ஊர்களுக்கு சென்றனர். அதில் குறிப்பாக வீரசைவ மன்னடியார் குலத்தை சேர்ந்த மூன்று குடும்பங்கள் கேரளா நோக்கி வந்தது. வரும் வழியில் அவர்களின் குல தெய்வமாம் மீனாட்சியை தரிசித்து வந்தனர். அப்போது அந்த குடும்பத்தை சார்ந்த ஒருவர் அக்கோவிலில் இருந்த கல் ஒன்றை எடுத்து அதையே மீனாட்சியாக பாவித்து தன்னோடு எடுத்து வந்தார். வாழ்வதற்கு தேவையான அடிப்படை பொருட்களை மூட்டையாக கட்டி எடுத்து வந்த போது அவர்களிடம் பனையோலையால் ஆன குடை ஒன்றும் இருந்தது.

ஒருவழியாக கேரளாவின் பள்ள சேனா பகுதியை வந்தடைந்தனர். சிதம்பரத்தில் வைர வியாபாரியாக இருந்த இவர்கள், இங்கு வந்து புது வணிகத்தை தொடங்க நினைத்த போது மதுரைக்கு சென்று மீனாட்சியை வழிபட வேண்டும் என நினைத்தனர். அந்த குடும்பத்தில் மிகவும் மூப்புடன் இருந்த வயோதிகர் தன் கையில் இருந்த மூட்டையையும், பனையோலை குடையையும் அங்கு விளையாடி கொண்டிருந்த இரு சிறுவர்களிடம் கொடுத்து விட்டு குளத்தில் நீராட சென்றார். நீராடுகையில் தன் வயோதிகத்தை எண்ணி வருந்தினார். வயோதிகத்தால் இங்கிருந்து நடந்து சென்று மீனாட்சியை தரிசிப்பதில் சிக்கல் வருமோ என துயருற்றார். பின் நீராடி முடித்த பின் மீண்டும் சிறுவர்களிடம் வந்து குடையை பெற நினைத்த போது குடையை அந்த இடத்திலிருந்து அசைக்க முடியவில்லை. அந்த பொருளையும் நகர்த்த முடியவில்லை இதற்கான காரணத்தை ஜோதிடர்களிடம் கேட்ட போது மீனாட்சியே இங்கு வந்திருப்பாதாக தெரிவித்தார்.

இந்த அதிசயத்தை அன்று மக்கள் நேரடியாக கண்டனராம். குடையை அந்த இடத்திலிருந்து நகர்த்த முடியாததால் இந்த இடத்திற்கு குடமந்து என்ற பெயரும் உண்டு. சில நூற்றாண்டுக்கு பின்னர் இன்று இருக்கும் கோவிலும் குளமும் உருவானது. நவராத்திரி, மண்டல விளக்கு, மாசி திருவிழா அகியவை இங்கு பெரு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இன்றும் பூஜை ஊர்வலம் நடக்கையில் அந்த சிறுவர்களின் வம்சாவளியை சார்ந்தவர்களே அம்மனின் வாளையும் விளக்கையும் ஏந்துகின்றனர்.

Tags:    

Similar News