சுதேசி இயக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட அதிசய ஆலயம்!

Update: 2021-02-28 00:15 GMT

புது டெல்லியில் மந்திர் மார்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது லக்‌ஷ்மிநாராயண் கோவில் இதற்கு மற்றொரு பெயரும் உண்டு பிர்லா மந்திர். பிர்லா என்ற பெயர் நம் நாட்டின் பெரும் தொழில்முனைவோரான பால்டியோ தாஸ் பிர்லா மற்றும் அவருடைய மகன் ஜுகல் கிஷோர் பிர்லா அவர்களின் பெயரால் பெயரிடப்பட்டது. இது பிர்லா குடும்பத்தினரால் கட்டப்பட்டது. புது டெல்லியின் முக்கிய அடையாளம் இந்த கோவில் என்றால் மிகையில்லை.

இந்த கோவிலை மஹாத்மா காந்தி அவர்கள் திறந்துவைத்தார். இந்த கோவிலை திறந்த வைக்க சொல்லி கேட்டப்போது மஹாத்மா காந்தி ஒரே ஒரு கட்டளை விதித்தாராம். அதாவது ஜாதி, மத பேதங்கள் ஏதும் பாராமல் இந்த கோவிலானது அனைத்து மனித குலத்திற்கும் சமமானதாக இருக்க வேண்டும்.



7.5 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது இக்கோவில் இந்த வளாகத்தினுள் கோவில்கள், பெரிய தோட்டம் மற்றும் மனதை வருடும் வகையில் கீதா பவன் எனும் சத்சங்க அரங்கமும் அமைந்துள்ளது. இங்கே மிக விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் முக்கியமானது தீபாவளி மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி.

இங்கே மூலவராக இலட்சுமி நாராயணர் இருந்த போதும். இங்கே சிவனுக்கு, விநாயகருக்கு, ஹனுமருக்கு, கிருஷ்ணருக்கு மற்றும் புத்தருக்கு என்று பிரத்யேக ஆலயங்கள் உண்டு.

இந்தியாவின் நவீன கட்டிடக்கலையில் தலைசிறந்த ஆளுமையாக விளங்கும் முதன்மை கட்டிட வடிவமைப்பாளர் சிரிஸ் சந்திர சாட்டர்ஜி இந்த கோவிலை கட்டமைத்துள்ளதார். இந்த கட்டிடக்கலையின் முக்கிய அம்சம், இந்தியாவின் முக்கிய வரலாற்று சம்பவமான சுவதேசி இயக்கத்தினை அடிப்படையாக கொண்டு அதிலிருந்து தாக்கம் பெற்று உருவாக்கப்பட்டது . 



பழமையும் புதுமையும் இணைந்த ஓர் அற்புத கட்டிடக்கலை இந்த கோவில். இந்து கோவில் கட்டிடக்கலை வடிவமைப்பில் இந்த் கோவில் நாகாரா முறையில் கட்டப்பட்டது. மூன்று மாடிகளை கொண்ட இந்த திருத்தலத்தில் மிகவும் விரிவான சித்திரம் தீட்டப்படுள்ளது.

இந்திய புராணங்களில் இடம்பெற்ற மிக முக்கியமான சம்பவங்கள், கதாபாத்திரங்கள் இங்கே வடிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் திருவுருவச்சிலைகள் ஜெய்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மிக விலைஉயர்ந்த மார்பிள் கல்லினால் செய்யப்பட்டது. கோவில் வடிவமைப்புக்கு மகரானாவிலிருந்து கோட்டா கற்கள் வரவழைக்கப்பட்டன. செயற்கையான நீருற்றுகள், அருவி போன்றவை இந்த கோவிலின் அழகை, தெய்வீகத்தன்மையை மேலும் கூட்டுகின்றன.

Tags:    

Similar News