தவழும் வடிவில் தரிசனம் - குழந்தை வரம் அருளும் ஆச்சர்ய கிருஷ்ணர் ஆலயம்

Update: 2022-08-25 02:00 GMT

பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் தொட்ட மல்லூர் எனும் இடத்தில், சென்பட்டனா நகரிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஶ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆலயம். இந்த கோவில் திவ்ய் ஷேத்திரங்களில் ஒன்றாகவும் புண்ணிய பூமியாகவும் கருதப்படுகிறது.

மிகவும் பழமையான இந்த கோவில் 3000 ஆண்டுகள் பழமையானது என்று சிலரும், 1500 ஆண்டுகள் பழமையானது என்று சிலரும் சொல்கின்றனர். ஆனால் மிக நிச்சயமாக இது 1500ஆண்டுகள் பழமையானது என்பதற்கு தரவுகள் காண கிடைக்கின்றன. சில தரவுகளின் அடிப்படையில் பார்க்கிற போது ஶ்ரீ ராமனுஜர் கர்நாடகாவில் திக் விஜயம் முன்பாக இந்த கோவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு எழுத்து வடிவிலான சுவடியின் அடிப்படையில் இந்த கோவிலில் இருக்கும் அப்ரமேயா சுவாமிக்கு 980 ஆம் ஆண்டில் நந்தா விளக்கு ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளன. எனவே ராமனுஜரின் பிறப்பிற்கு முன்பே இக்கோவில் இருந்திருக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.

இங்கிருக்கும் நவநீத கிருஷ்ணருக்கு அப்ரமேயா சுவாமி என்பது பெயர். அரிதிலும் அரிதாக தவளும் பாலகன் கண்ணனாக இந்த கோவில் அருள் பாலிக்கிறார் கண்ணன். இந்த கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், இங்கு தக்‌ஷிண அயோதிக்கு ஶ்ரீ ராமர் வருகை தந்த போது இங்கிருக்கும் அப்ரமேய சுவாமியை வணங்கினார் என்கின்றனர். அதனால் இங்கிருக்கும் கண்ணனுக்கு ஶ்ரீராம அப்ரமேய சுவாமி என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் ஶ்ரீராமர் சில சடங்குகளையும், ஹோமங்களையும் செய்தார் என்பதற்கு வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. பிரமாண்ட புராணத்தில் ஷேத்திரம் மஹாத்மியம் காண்டத்தில் இங்கிருக்கும் அப்ரமேய சுவாமி குறித்து 12 அத்தியாங்களில் விளக்கப்பட்டுள்ளது.

மலைக்க வைக்கும் ராஜகோபுரம், அதில் தசாவதாரத்தை குறிக்கும் திருவுருவச்சிலைகள் என இக்கோவிலின் அழகும் பிரமாண்டமும் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. குழந்தையில்லாத தம்பதியினர் இங்கு வந்து நவநீத கண்ணனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு அவர்கள் வேண்டிய அருள் கிடைத்த பின் குழந்தையோடு வந்து நவநீத கிருஷ்ணரான அப்ரமேய சுவாமிக்கு நன்றியும் பிரார்த்தனையும் செலுத்தி செல்கின்றனர்.

Tags:    

Similar News