நந்தி தேவரின் திருமணம் ஏழூர்த் திருவிழாவாக நடக்கும் அதிசயம்!
திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் ஆலயம்
தமிழகத்தின் தஞ்சை பகுதியில் அமைந்துள்ள திருச்சோற்றுத்துறை கிராமத்தில் அமைந்துள்ளது ஓதவனேஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கு ஒப்பிலா செல்வர் கோவில் என்ற பெயரும் உண்டு. தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் முக்கியமானதாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு தக்ஷிண கைலாசம் என்கிற மற்றொரு சிறப்பு பெயரும் உண்டு. இங்கு தான் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர் பிறந்தார் என்பது நம்பிக்கை.
சோழர்கள், பாண்டியர்கள், தஞ்சை நாயகர்கள் மற்றும் தஞ்சையை ஆண்ட மராத்தியர்கள் என பலர் இந்த கோவிலை கட்டமைத்த குறிப்புகள் உண்டு. ஏரத்தாள ஆயிரமாண்டுகளுக்கும் மேல் பழமையானது இந்த கோவில். இங்கிருக்கும் மூலவருக்கு ஓதவனேஸ்வரர் என்றும் அம்பாளுக்கு அன்னபூரணி என்றும் பெயர். ஏராளாமான் சந்நிதிகளை கொண்ட பிரமாண்ட திருத்தலமாக இக்கோவில் காட்சி அளிக்கிறது.
ஒரு முறை பெரும் பஞ்சம் வந்த போது அதை போக்குமாறு அந்த ஊரின் தீவிர சிவபக்தரான அருளாளன் வேண்டி க்கொண்ட போது அவருக்கு சிவபெருமான் அட்சயபாத்திரம் அருளி அள்ள அள்ள குறையாத உணவை மக்களுக்கும் வணங்கும் படி பணித்தார் என்பது ஒரு புராணம். மற்றொரு புராணத்தின் படி ஒரு முறை பஞ்சம் வந்த போது அதை போக்குமாறு முனிவர் கெளதமர் இங்கே தீவிர தவம் மேற்கொண்ட படியால் இந்த இடம் ஒருபோதும் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது என்று அருளினார். அதனாலேயே இப்பகுதிக்கு அரிசி விளைந்த வயல் என்ற பெயரும் ஊருக்கு திருச்சோற்றுத்துறை என்ற பெயரும் வந்தது.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், சிவபெருமான் பக்தர்களுக்கு உணவு வழங்கிய ஏழு சப்தஸ்தலங்கள் உள்ளன. அவை முறையே, திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருபூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகியவைகளை ஏழூர் என்று அழைப்பர். இங்கு முதல் தலமாம் திருவையாற்றில் நந்தி தேவருக்கும் சுயம் பிரகாசைக்கும் திருமணம் நிகழும். இவர்கள் வெட்டி வேர் பல்லக்கிலும் இவர்களோடு திருவையாற்றின் நாயகர்களான ஐயாறப்பர் மற்றும் அறம் வளர்த்த நாயகி ஆகியோர் மற்றோர் பல்லக்கில் ஏறி இரண்டாம் ஸ்தலத்திற்கு புறப்படுவார்கள். அங்கே உள்ள அய்யனும், அம்பிகையும் இவர்களை எதிர்கொண்டு அழைத்து உபசரிப்பார்கள். பின்னர் இந்த இருவூரை சேர்ந்த மக்களும் மூன்றாம் ஊரான திருச்சோற்ற்த்துறைக்கு வருவார்கள். இங்கே ஓதவனேஸ்வரரும், அன்னப்பூரணி அம்பிகையும் எதிர்கொண்டு அழைத்து உபசரித்து பின் அவர்களோடு இவர்களும் சேர்ந்து நான்காம் தலத்திற்கு செல்வார்கள். இவ்வாறே ஏழூர் திருவிழா ஏழு ஸ்தலங்களில் நடைபெறும் இறுதியாக ஏழு மூர்த்திகளும் அடுத்த நாள் திருவையாறை அடைவார்கள்.
இந்த வைபத்தை காண்பவர்களுக்கு திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.