தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அழகாபுத்தூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது படிகாசு நாதர் கோவில். இவருக்கு மற்றொரு பெயர் ஸ்வர்ணபுரீஸ்வரர் என்பதாகும். இங்கிருக்கும் அம்பிகைக்கு செளந்தர்ய நாயகி என்று பெயர். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனாருடன் தொடர்புடையது இத்தலம். அழகாபுத்தூர் தான் அவருடைய ஜனன ஸ்தலம் ஆகும். இக்கோவிலுக்கு சோழர்கள் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர் என்பதற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இறுதியாக இக்கோவிலை புணரமைத்து விரிவுப்படுத்தியது தஞ்சை நாயக்கர்கள் ஆவர்.
இத்தலம் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், புகழ்த்துணை நாயனார் தினமும் இறைவனுக்கு அரசலாற்றில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எந்த இடர் வரினும் இந்த சேவையை அவர் இறைவனுக்கு நிறுத்துவதாக இல்லை. ஒரு முறை ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. ஊர் மக்கள் உணவின்றி தவித்தனர். உணவு இல்லாத போதும் தன் நீர் சேவையை புகழ்த்துணையார் நிறுத்தவேயில்லை. ஒரு முறை பல நாள் உணவின்றி இருந்த காரணத்தால் அவர் நீர் எடுத்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நேரத்தில் மயங்கி விழுந்தார். அவர் எடுத்து வந்த நீர் அய்யனின் தலையில் விழுந்து அபிஷேகம் நிகழ்ந்தது. இறைவன் நாயனார் கனவில் தோன்றி, அவர் பக்தியில் மெச்சி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டர். அதற்கு நாயனார் ஊர் மக்கள் பசி போக்குமாறு கோரினார். அதன் பொருட்டு இறைவன் தினமும் புகழ்த்துணையாருக்கு ஒரு படிக்காசு கொடுத்ததாகவும் அந்த படிக்காசு கொண்டு அவர் ஊர் மக்களின் பசியை போக்கி முக்தியடைந்தார் என்பது வரலாறு. அதனால் தான் இங்குள்ள மூலவருக்கு படிக்காசு நாதர் என்று பெயர்.
மற்ற கோவில்களில் சூரிய சந்திரன் கிழக்கு நோக்கி அமைந்திருக்குமெனில், இங்கே இருவரும் நேரெதிர் பார்க்குமாறு அருள் பாலிக்கின்றனர். இங்கிருக்கும் மூலவர் முன் ஒன்பது குழிகள் இருக்கின்றன இதில் ஒன்பது கிரகமும் வாயு வடிவில் இருப்பதாக நம்பிக்கை. முன்னோர்களுக்கான பூஜைகளை இங்கே விளக்கேற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
மற்றொரு அதிசயமாக, இங்கே வழிபடும் மக்கள் படிக்காசு பூஜை செய்கின்றனர். அதாவது இரு காசுகளை மூலவரின் படியில் வைத்து வணங்கி அதில் ஒரு காசினை விட்டு சென்று மற்றொரு காசை மட்டும் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் வீட்டின் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.