தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாபநாசம் எனும் பகுதியில் உள்ளது புகழ் பெற்ற பாபநாசநாதர் கோவில். இந்த கோவில் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திராவிட கலையின் உச்சமாக திகழும் இந்த கோவிலில் சிவபெருமான் பாபநாசநாதர் என்ற பெயரிலும் அவருடைய சரி பாதியான பார்வதி தேவி உலகம்மை என்ற பெயரிலும் அருள் பாலிக்கின்றனர்.
இந்த கோவிலை சுற்றியும் நாயக் கலையினை பிரதிபலிக்கும் சிற்பங்கள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த கோவில் குறித்த பல ஆச்சர்யமான புராண கதைகள் உண்டு. அதில் முக்கியமானதாக சொல்லப்படுவது, கைலாசத்தில் சிவன் பார்வதி திருக்கல்யாணம் நிகழ்ந்த போது பெரும் கூட்டம் கூடியிருந்ததாகவும் அந்த கண் கொள்ளாக்காட்சியை காண முடியாமல் அகஸ்தியர் வருந்தியதாகவும் சொல்லப்படுகிறது.
அகஸ்த்தியரின் தீவிர பக்தி கண்டு மெச்சிய சிவபெருமான் அகஸ்தியருக்கும் அவருடைய மனைவியான லோபமுந்த்ராவிற்கும் இந்த இடத்தில் பார்வதி தேவியுடன் கல்யாண கோலத்தில் காட்சி அளித்துள்ளார். இன்றும் இந்த இடத்தின் அருகே அமைந்துள்ள நீர்வீழ்ச்சியை அகஸ்த்தியர் நீர்வீழ்ச்சி என்றே அழைக்கின்றனர்.
இந்த கோவிலை குறித்து சொல்லப்படும் மற்றொரு கதை யாதெனில், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் உருவாக காரணமாக இருந்தவர் முனிவர் உரோசமர்.
இவர் தாமிரபரணி ஆற்றில் ஒரு கொத்து மலர்களை நீந்த விட்டதாகவும் முதல் மலர் தாமிரபரணி கரையை எட்டிய இடத்தில் இந்த கோவில் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாக இங்கே நவகிரங்களுக்கும் தனி சந்நிதி உண்டு இதனை நவ கைலாசம் என அழைக்கின்றனர். இதனுடைய முக்கிய மூலவராக இருப்பவர் கைலாசாநாதர்.
இங்குள்ள தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அகஸ்தியர் தீர்த்தம் காசிக்கு இணையான பாவங்களை தீர்க்கும் இடமாக கருதப்படுகிறது, இந்திரன் துவஸ்தா என்கிற சுக்கிராச்சாரியரின் மகனை கொன்று வீழ்த்தினார்.
காரணம், துவஸ்தா தேவர்களுக்கு எதிரான பலத்தை பெற சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். பிராமணரை கொன்றதால் ஏற்பட்ட பிரமஹஸ்த்தி பாவம் நீங்க பல இடங்கள் சென்றும் இயலாததால் இந்த ஸ்தலத்தில் நீராடி இறைவனை வணங்கி தன் பாவம் நீங்க பெற்றதாலேயே இந்த ஸ்தலத்திற்கு பாப நாசம் என்ற பெயர் வந்தது