அர்ஜூனன் வில்லில் உருவான குளம். ஆயிரமாண்டாக நீரே வற்றாத அதிசய கோவில்
அருள்மிகு பயறணீஸ்வரர் ஆலயம், அரியலூர்
தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பயறணீஸ்வரர் ஆலயம். பழமையான சிவாலயங்களுள் முக்கியமான கோவில் இது. கிட்டதட்ட 1400 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் மூலவரின் பெயர் பயற்ணீஸ்வரர் அல்லது பயற்ணீநாதர் என்பதாகும். இங்குள்ள அம்பாளின் பெயர் நறுமலர் பூங்கழல் நாயகி. இங்கிருக்கும் விநாயகருக்கு "வில் வளைத்த பிள்ளையார்" என்று பெயர். இந்த விநாயகர் மகாபாரதத்தில் அர்ஜுனனுக்காக அவன் வைத்திருந்த காண்டிபத்தை வளைத்தவர் என்பதால் இந்த பெயர். மேலும் இந்த சிறப்பினாலேயே இக்கோவில் தீர்த்தத்திர்கு காண்டீப தீர்த்தம் என்று பெயர்.
மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தரும் இக்கோவில் ஏழுநிலை கோபுரத்தை கொண்டது. இந்த கோவில் திருக்குளத்தில் நீர் வற்றுவதே இல்லை. காரணம் பாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்த போது முற்கபுரி என்றழைக்கப்படும் இந்த பயறணீஸ்வரத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவர்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டனர், அந்த சிரமத்தை போக்க விநாயகரை வேண்டி வழிபட்டனர். அதன் பொருட்டு, அர்ஜூனின் காண்டீபத்தை வளைத்து அம்பு எய்து இந்த குளத்தை உருவாக்கினார் விநாயகர். அப்போதிருந்து இந்த குளத்தில் நீர் வற்றுவது இல்லை. மேலும் இந்த புராண கதைக்கேற்ப இன்றும் கையில் வில்லுடன் வில் வளைத்த விநாயகராக தரிசனம் அருள்கிறார். அதோடு விநாயகர் உருவாக்கிய குளம் இது என்பதால் இங்கு நீர் வற்றுவதே இல்லை.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், ஆயிரம் ஆண்டுகள் முன்பு இந்த ஊருக்கு வணிகன் ஒருவன் வந்தான். இங்கிருந்த சுங்க சாவடியில், மிளகு வணிகம் செய்தால் அதிக கட்டணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தான். அதனால் தன்னிடம் இருப்பது மிளகு என்பதை மறைத்து பயிறு என்று பொய் கூறினான். அவன் செல்ல வேண்டிய இடம் வந்த போது அவன் வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து பார்த்த போது அதில் அவன் வைத்திருந்த மிளகு பயிறாக மாறியிருந்தது. இது சிவன் தனக்களித்த தண்டனை என்பதை அறிந்து தன் தவறை உணர்ந்து வழிபட்டான். அவன் மன்னிப்பை ஏற்ற சிவபெருமான் மீண்டும் அந்த பயிறை மிளகாக மாற்றினார்.
இதனாலேயே இவருக்கு பயிறணீஸ்வரர் என்ற பெயரும், இந்த ஊருக்கு பயறணீச்சுரம் என்ற பெயரும் உண்டானது. வடமொழியில் பயிறு என்றால் முற்கம் என்று பெயர். இதனால் இவரை முற்கபுரீஸ்வரர் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. மேலும், இங்கிருக்கும் அம்பாளுக்கு வடமொழியில் சகுந்தலாம்பிகை என்று பெயர்.