ஶ்ரீ ராமரே பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இன்றும் இருக்கும் ஆச்சர்ய கோவில்

ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம், கீசர்குட்டா, தெலுங்கானா

Update: 2022-12-28 00:30 GMT

தெலுங்கானா மாநிலத்தில், மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்திலுள்ள கீசரகுட்டா பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் சுவாமி திருத்தலம். தெலுங்கானா மாவட்டத்தில் மிகவும் பழமையான கோவில் இது. கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானது என சொல்லப்படுகிறது. தெலுங்கானாவின் தலைநகரமான ஹைதரபாத்தில் இருந்து வெறும் 35 கி.மீ தொலைவில் இந்த மலைபகுதி அமைந்துள்ளது.

இந்த கோவில் திரேத யுகத்தில் இருந்து இருந்துவருவதாக சொல்லப்படுகிறது. கார்த்திகை சோமவாரத்திலும், மகா சிவராத்திரியின் போதும் இங்கே லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவதுண்டு. இந்த கோவிலின் மூலவருக்கு ராமலிங்கேஸ்வரர் என்பதும் அம்பாளுக்கு பவானி என்பதும் திருப்பெயராகும்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், ராவண வதம் முடித்து தம்பதி சமேதராக இங்கே வருகை தந்தார். ராவணன் பிராமணர் என்பதால், பிராமணரை கொன்ற தோஷத்தை போக்க சிவலிங்கத்தை நிறுவை அதற்கு வழிபாடு நடத்த வேண்டும் என்பதற்காக இந்த தலத்திற்கு ராமர் சீதை, அனுமருடன் வருகை புரிந்திருந்தார். அப்போது அனுமரிடம் இங்கே சிவலிங்கம் நிறுவி பூஜை செய்வதற்காக வாரணாசியிலிருந்து 101 லிங்கங்களை கொண்டு வரும் படி ராமர் கூறினார். அனுமரும் லிங்கங்களை எடுத்து வர வாரணாசி புறப்பட்டார்.

ஆனால் நல்ல நேர நெருங்கி கொண்டிருந்தது, அனுமரை காணவில்லை. நல்ல நேரம் முடியும் நேரத்தில் சிவபெருமானே நேரில் வந்து ஒரு லிங்கத்தை ராமருக்கு வழங்கினார். சிவபெருமானே வழங்கிய லிங்கம் இது என்பதால் இதனை சுயம்பு மூர்த்தியாக பாவித்து வழிபடுகின்றனர். மேலும் அதற்கு ராமலிங்கேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. நல்ல நேரம் முடிவதற்குள் அந்த லிங்கத்தை நிறுவி பூஜையை செய்தார் ராமர்.

சற்று தாமதமாக வந்த அனுமர் தான் வருவதற்குள் வழிபாடு முடிந்ததை எண்ணி வருந்தினார். தான் கொண்டு வந்த லிங்கம் நிறுவப்படாததால் வருத்தமடைந்தார். இதனால் வேதனையுற்ற அவர் தான் கொண்டு வந்த லிங்கங்களை மலையை சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக தூக்கி வீசினார். இதன் பொருட்டு இன்றும் இந்த மலையை சுற்றி பல லிங்கங்கள் இருப்பதை காண முடியும்.

அனுமரை சமாதானம் செய்யும் பொருட்டு அனுமருக்கு வரமொன்றை அளித்தார் ராமர். இந்த கோவிலில் அவருக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார். மேலும் கேசரியின் மைந்தனான அனுமரை குறிக்கும் வகையில் இந்த மலை கேசரி கிரி என்றே அழைக்கப்படும் என்று அருளினார். இதுவே மருவி கேசரா என்றும் கேசர குட்டா என்றும் ஆனது. அன்று தொடங்கி இன்று வரை ராமரின் வழிகாட்டுதல் படியே சடங்குகள் இங்கே நடைபெறுகின்றது.

Tags:    

Similar News