கும்பகோணத்திற்கு அருகே திருச்சேறையில் அமைந்துள்ளது சாரநாத பெருமாள் கோவில். விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலமாகும். 6 – 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவில்களுள் ஒன்று. அதுமட்டுமின்றி 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது. இங்கிருக்கும் மூலவர் சாரநாத பெருமாள் என்ற திருப்பெயரிலும், அம்பாள் சாரநாயகி என்ற திருப்பெயரிலும் அழைக்கபடுகின்றனர்.
காவேரித் தாயின் தவத்தை மெச்சி, அவருக்கு தரிசனம் நல்கிய இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சோழர்கள், விஜயநகர பேரரசு மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆகியோரின் பங்களிப்பால் உருவான கோவில் இது. காவேரித் தாய்க்கென தனி சந்நிதி இருக்கும் சிறப்புமிக்க கோவில் இது.
தாய் காவேரி, மார்கண்டேயர், மற்றும் இந்திரர் ஆகியோருக்கு இந்த திருத்தலத்தில் விஷ்ணு பெருமான் காட்சியளித்துள்ளார். சித்திரை மாதத்தில் இங்கு நிகழும் தேரோட்டம் மிகவும் விஷேசமானது. இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், இங்கு மட்டுமே பெருமாள் ஶ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி மற்றும் நீலாதேவி எனும் ஐப்பெரும் தேவியரோடு அருள் வழங்குகிறார்.
பிரளயக்காலம் வந்த போது உலக அழிய இருப்பதை எண்ணி கவலையுற்ற பிரம்ம தேவர், விஷ்ணுவிடம் ஸ்ருஷ்டியை நிகழ்த்துவதற்கும் வேதங்களை காப்பதற்கும் ஏதேனும் வழியை கூறுங்கள் என கேட்டபோது. அனைத்து இடங்களிலும் மண்ணெடுத்து அதை ஒரு மண் பானையில் போட்டு வைக்கும் படி விஷ்ணு கூறினார். அப்போது பிரம்ம தேவர் திருச்சேறையில் மண்ணெடுத்து பானை செய்தார் அதில் வேதங்களையும் மற்றும் சிருஷ்டிக்கு தேவையானவைகளையும் போட்டு வைத்தார். மஹா பிரளயத்திலிருந்து இந்த இடத்தை காத்ததால் சார சேத்திரம் என்று அழைக்கப்பட்டது .
மற்றொரு முறை காவேரித்தாய், நதிகளில் புனித நதியாக கங்கையே இருக்கிறாள் அவளுக்கு இணையான வரம் வேண்டும் என கேட்டு இங்கே கடுமையான தவம் புரிந்த போது, அவருடைய தவத்தை சோதிக்க விஷ்ணு குழந்தை வடிவெடுத்து வந்தார். அப்போது அந்த குழந்தையை மிகவும் அன்புடன் உபசரித்தாள் காவேரி தாய். அவளுடைய பண்பை மெச்சிய விஷ்ணு பெருமான் கருட வாகனத்தில் ஐப்பெரும் தேவியருடன் தரிசனம் தந்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்ற போது, கங்கைக்கு இணையான வரம் வேண்டும் மற்றும் விஷ்ணு பெருமான் இதே கோலத்தில் இங்கே அருள் பாலிக்க வேண்டும் என்று கேட்டதை ஏற்று இங்கு ஐப்பெரும் தேவியருடன் அருள் பாலிக்கிறார்.