தொழில் வாழ்வின் பிரச்சனைகளை தீர்க்கும் சங்கர நாரயணர் திருக்கோவில்

Update: 2022-09-03 00:30 GMT

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில், சங்கரன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது சங்கர நாரயணசாமி கோவில். இந்த கோவில் பத்தாம் நூற்றாண்டில் உக்கிர பாண்டியனால் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருத்தலத்தில், மூலவராக அருள் பாலிக்கும் சிவனுக்கு சங்கரலிங்கம் அல்லது சங்கர நாரயணர் என்பது திருப்பெயர். அம்பாளுக்கு கோமதி தேவி என்று பெயர்.

இந்த கோவிலின் திருப்பெயரை ஒட்டியே இந்நகருக்கு சங்கரன் கோவில் என்ற பெயர் வந்தது. சிவனும் ஹரியும் சேர்ந்தும் காட்சி தரும் அரிய சில கோவில்களில் இந்த கோவிலும் மிக முக்கியமானது. இந்த கோவிலுக்கு ஆவுடையம்மன் கோவில் மற்றும் தவசு கோவில் என்ற பெயரும் உண்டு.

நாகர்களின் அரசனான சங்கன் எனும் மன்னன் சிவபெருமானின் பக்தன், பதுமன் எனும் அரசன் விஷ்ணுவின் பக்தர். இவர்கள் இருவரும் எப்போதும் தங்கள் கடவுளர்களில் யார் பெரியவர் என்று விவாதம் செய்வது வழக்கம். இந்த விவாதத்திற்கு தீர்வு காண பார்வதி தேவியை அணுகினர். அம்பாளோ இருவருமே சம அளவு வலிமையுள்ளவர்களே என்பதை நிறுபிக்க இருவரும் ஒரு சேர காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார். அதன் விளைவாக சிவனும், விஷ்ணுவும் சங்கர நாரயணராக காட்சி தந்தனர். அதுமட்டுமின்றி பார்வதி தேவியின் விருப்பத்திற்கு கிணங்க சிவபெருமான் சங்கர லிங்கமாக காட்சி தந்தார்.

அம்பாள் தவமிருந்து இறைவனின் காட்சியை பெற்ற அந்த நாளை ஆடித்தபசு திருநாள் என்று அழைக்கின்றனர். இந்த விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. அம்பாள் தான் இவ்விழாவின் பிரதான தெய்வம் என்பதால் அவர் மட்டுமே உற்சவ ரதத்தில் எழுந்தருளுவார்.

இக்கோவிலின் மற்றொரு அதிசயமாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மூன்று நாட்கள் சங்கர நாரயணர் மீது சூரியவொளி தொடர்ந்து விழுகிறது. இங்கிருக்கும் லிங்கம் புற்றிலிருந்து வெளிப்பட்டது என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. இத்திருத்தலத்தில் ஸ்படிக லிங்கமாக இருக்கும் சந்திரமெளலீஸ்வரருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

தொழில் வாழ்கை மேம்பட இந்த கோவிலில் தரிசனம் செய்வது மிகுந்த சிறப்பை தரும் என்கின்றனர். இக்கோவிலின் புண்ணிய தீர்த்தமாக நாகசுனை தீர்த்தமும், இக்கோவிலின் தல விருட்சமாக புன்னையும் திகழ்கிறது.

Tags:    

Similar News