கங்கையில் நீராடிய புண்ணியம் இத்தலத்தில் கால் வைத்தாலே கிடைக்கும் அதிசயம் !

Update: 2021-12-17 00:30 GMT

ஆந்திரபிரதேசம் கர்நூலில் அமைந்துள்ளது மல்லிகர்ஜூனா கோவில். இதனை எளிமையாக ஶ்ரீசைலம் என்றால் அனைவரும் நன்கு அறிவர். சைவ கோவில்களில் முக்கியமான திருத்தலம் இது. காரணம் இக்கோவில் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். இங்கே பார்வதி தேவி மல்லிகா என்ற பெயரிலும் சிவபெருமான் அர்ஜூனா என்ற பெயரிலும் வழிபடப்படுகிறார்கள்.

கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்துள்ள இக்கோவில் அமைதிருப்பது ஒரு மலையின் மீது. இங்கு நந்தி தேவரே மலையாக இருப்பதாகவும், அதன் மீதே சிவபெருமான் குடிகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இம்மலையை ஶ்ரீதன், ஶ்ரீகிரி, ஶ்ரீபர்வதா என பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

இந்த கோவில் குறித்து ஏராளமான புராண குறிப்புகள் சொல்லப்படுவதுண்டு அதில் முக்கியமானது இது அம்பிகையின் சக்தி பீடங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பதாகும். இங்கே தான் அம்பிகையின் கழுத்து பகுதி விழுந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அம்பிகை தேனீயின் வடிவெடுத்து அருணாசுரனை வதைத்தார் என்று சொல்லப்படுகிறது.

மற்றும் இப்பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் இறைவனை மல்லிகையால் பூஜித்து வந்ததால் இங்குள்ள பெருமான் மல்லிகார்ஜுனா என அழைக்கப்படுகிறார். ஸ்கந்த புராணத்தின் படி த்ரேத யுகத்தில் ராமரும் சீதையும் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.

த்வாபரா யுகத்தில் பாண்டவர்கள் அவர்களின் வனவாசத்தின் போது இங்கே சிறிது காலம் தங்கியிருந்து வழிபாடு செய்தார்கள் என்கின்றனர். மேலும் இங்கே ஒருவர் வழிபடுவதால் அவருக்கு கங்கையில் நீராடிய பலன், நர்மதா நதிக்கரையில் தவம் செய்த பலன், லட்கணக்கானவர்கள் தானம் கொடுத்த பலன் என அனைத்தும் ஒரு சேர கிடைக்கிறது என்பது நம்பிக்கை. மேலும் நந்தி அவதரித்த ஸ்தலம் என்பதால் இங்கே பிரதோசத்தில் வழிபடுவது மிகுந்த நன்மையை தரும் என சொல்லப்படுகிறது.

இந்த கோவிலின் வளாகத்தினுள் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. ஆனாலும் மல்லிகர்ஜூனா மற்றும் பிரம்மரம்பா ஆகியவை மிகவும் புகழ்பெற்ற இடமாகும். இந்த கோவிலின் மைய மண்டபத்தில் எழு பெரும் தூண்களுடன் நந்திகேஸ்வரரின் திருவுருவம் உள்ளது. மேலும் தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

மேலும் விநாயகர் சித்தி புத்தியை மணந்த தலம் என்பது மற்றொரு ஆச்சர்ய தகவலாகும்.

Image TripAdvisor

Similar News