இந்திரன் தினமும் இரவு ஈசனை வணங்கும் அதிசய ஆலயம், தானுமலையான் கோவில்

Update: 2022-02-23 01:16 GMT

தானுமலையான் கோவில் என்றழைப்பதை விடவும் இக்கோவில் அமைந்திருக்கும் பகுதியான சுசீந்தரம் என்றால் அனைவரும் அறிவர். தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இக்கோவில் குறித்து சொல்லப்படும் சுவாரஸ்ய குறிப்பு யாதெனில், திருவான்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இக்கோவில் சேர்ந்த போது இந்த பெயர் இக்கோவிலுக்கு நிலைத்தது.

முப்பெரும் தெய்வங்களும், மும்மூர்த்தியுமான சிவனை "தானு (ஸ்தானு)) " என்றும், விஷ்ணு பெருமாளை மால் என்றும், அயன் என்றால் பிரம்ம தேவரை குறிக்கும் வகையிலும் மூன்று பெயர்களையும் இணைத்து தாணுமலையான் கோவில் என்ற திருப்பெயர் இத்திருத்தலத்திற்கு வந்தது. இரண்டு ஏக்கர் நிலத்தில் கோவில் வளாகமும், 11 அடுக்கில்144 அடி உயரத்தில் இதன் பிரமாண்ட கோபுரமும் அமைந்துள்ளது. தற்சமயம் இருக்கும் இந்த கோவில் அமைப்பு சோழர்களால் கட்டப்பட்டு, பின்னர் திருமலை நாயக்கர்களாலும் மற்றும் திருவான்கூர் அரசராலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்தில் சுச்சீ என்றால் தூய்மை என்று அர்த்தம். ஸ்தல புராணத்தின் படி தேவர்களின் அதிபதியான இந்திரன் தன் பாவங்களை சாபங்களை இத்தலத்திலிருக்கும் ஈசனை வழிபட்டு நிவர்த்தி செய்து கொண்டான் என்பது வரலாறு. இந்திரனின் சாபம் நிவர்த்தியானதால் தினமும் நிகழும் அர்த்தஜாம பூஜையில் இந்திரன் வழிபடுவதாக நம்பிக்கை.

ஒரே மூர்த்தியில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா இருக்கும் அதிசய தரிசனம் அரிதினும் அரிதான ஒன்றாகும். டிசம்பர் மற்றும் ஜனவரியில் 10 நாட்கள் விழாவாக இங்கே நிகழும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் குவிவது வழக்கம். இக்கோவிலில் 13 அடி உயரத்தில் 21 அடி நீளத்தில் அமைந்திருக்கும் நந்தி தேவர் திருவுருவம் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்திகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

அத்ரி முனிவர் மற்றும் அவரது பத்தினியான அனுஷ்யாவை மும்மூர்த்திகளும் சோதித்தனர், பின் அனுஷ்யா தேவியின் அறிவார்ந்த செயலால் அந்த சோதனையிலிருந்து மீண்டார். மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் அந்த தம்பதியருக்கு அருள் வழங்கியதாலே இக்கோவிலில் மும்மூர்த்திகளும் குடு கொண்டுள்ளனர் என்பது ஐதீகம். எனவே இக்கோவிலில் மூன்று மூலவர்கள், முவரையும் இணைத்து தானுமலையான் என்று அழைக்கும் அதிசயம் இங்கு நிகழ்கிறது.

Tags:    

Similar News