தீரா வினைகளை தீர்க்கும் அதிசய தீர்த்தங்கள். தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம்

Update: 2022-07-08 02:13 GMT

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் ஹரூர் தாலுக்காவில் அமைந்துள்ளது புனித இடமான தீர்த்தமலை. ஹரூரிலிருந்து வடகிழக்காக 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்குள்ள மலையின் உச்சியில் இருப்பது தான் தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும்.

இந்த கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களின் பங்களிப்பின் மூலம் கட்டப்பட்ட கோவில் இது. இதனை உணர்த்தும் ஏராளமான கல்வெட்டுகளை இன்றும் நாம் கோவிலெங்கும் காண முடியும். ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ பேரரசர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிந்த குறிப்புகளும் இந்த கல்வெட்டில் உண்டு. அருணகிரிநாதர் தன்னுடைய பாடல்களில் தீர்த்தகிரீஸ்வரரின் பெருமையை போற்றி பாடியுள்ளார். இக்கோவிலின் மூலவருக்கு தீர்த்தகிரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு வடிவாம்பிகை என்பதும் திருப்பெயராகும்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், ராமாயண போரில் ராவணனை வெற்றி கண்டு ஶ்ரீராமர் அயோத்தி திரும்பிய போது, பூஜைக்காக தீர்த்தத்தை கங்கையிலிருந்தும், மலர்களை காசியிலிருந்தும் கொண்டு வர தாமதமாகிவிட்டது. எனவே, ஶ்ரீராமர் தன் வில்லால் மலையில் அம்பெய்தார், அப்போது உருவானது தான் ஶ்ரீராமர் தீர்த்தம். 9 மீட்டர் உயரம் கொண்ட இந்த சின்ன நீர்வீழ்ச்சியே ஶ்ரீராமர் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. எத்தனை வறட்சியான காலத்திலும் இங்குள்ள நீர் குறைவது இல்லை. அதுமட்டுமின்றி இங்கிருக்கும் நீரை ஒரு பானையில் அனுமர் வீசிய போது அது இந்த இடத்திலிருந்து 12 கி.மீ தூரம் தள்ளி தென்பெண்ணையாற்றங்கரையில் சென்று விழுந்தது இதுவே அனுமந்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

தாங்கள் செய்த பாவங்களில் இருந்து விடுதலை வேண்டி வரும் பக்தர்கள் முதலில் அனுமந்த தீர்த்ததில் நீராடி, பின் இங்கிருக்கும் ஶ்ரீராமர் தீர்த்ததில் நீராடுவதால் அவர்களின் பாவம் தொலைகிறது என்பது ஐதீகம்.

ராமபிரான் சிவபெருமானை பிரதிஷ்டை செய்த இரண்டு இடங்களில் இந்த இடமும் ஒன்று. மற்றொன்ரு இராமேஸ்வரம். இந்த இரு கோவில்களுமே தீர்த்ததிற்கு சிறப்பு பெற்றவை. மூலிகைகளும், ஆன்மீக ஆற்றலும் நிறைந்திருக்கும் இந்த மலையில் பின்வரும் தீர்த்தங்கள் புகழ் பெற்றவையாகும்.

மலையிலிருக்கும் அகஸ்திய தீர்த்தம், ராமர் தீர்த்தம், அக்னி தீர்த்தம், கெளரிதீர்த்தம், குமார தீர்த்தம், மலை குகையின் உச்சியிலிருக்கும் வசிஸ்ட தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம், அந்தியூரிலிருக்கும் இந்திர தீர்த்தம், வேப்பம்பட்டியிலிருக்கும் எம தீர்த்தம், மற்றும் அனுமந்த தீர்த்தம்.

இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை வழிபடுவதால் வினைகள் யாவும் தீரும், கடன் தொல்லைகள் அகலும், திருமண தடை மற்றும் குழந்தைகள் இன்றி தவிப்போருக்கும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News