கோணேஸ்வரர் ஆலயம் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக அமர்ந்திருப்பவர் சிவபெருமான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருக்குடவாயிலில் அமைந்த திருத்தலம் இது. இங்கிருக்கும் ஈஸ்வரருக்கு கோணேஸ்வரர் என்று பெயர் அம்பாளுக்கு பெரியநாயகி என்று பெயர். கோவிலின் இராஜகோபுரம் 80 அடி உயரமும், இரண்டு பராக்கிரமங்களையும் கொண்டது. இந்த கோவிலின் தீர்த்திற்கு அமிர்த தீர்த்தம் என்று பெயர்.
திருஞானசம்பந்தரின் பதிகத்தில் இத்திருத்தலம் போற்றப்பட்டுள்ளது. சம்பந்தர் விழா மற்றும் ஆருத்ரா தரிசனம் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது உயிர்கள் அழிந்து விடக்கூடாது கருணையில் பிரம்ம தேவர் அனைத்து உயிர்களையும் ஒரு கும்பத்தில் இட்டு இந்த இடத்தில் வைத்ததாகவும் அதற்கு முகப்பில் சிவலிங்கம் இருந்து பாதுகாத்து வந்ததாகவும். காலங்கள் கடக்கையில், சிவலிங்கத்தை புற்று மூடிவிட்டது. இந்த புற்றை கருட தேவர் தன் மூக்கினால் குத்தி உடைத்து, அதனுள் இருந்த சிவபெருமானை உலகுக்கு வெளிப்படுத்தினார். உயிர்கள் அனைத்தும் இருந்த அந்த கும்பத்திற்கு அமிர்த குடம் என்று பெயர். அதனாலேயே இந்த தலம் அமிர்த தலமாயிற்று. மேலும் இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் அமிர்த தீர்த்தம் என்பதாகும்.
இங்கிருந்த அமிர்த குடம் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு மூன்றாக உடைந்தது. அதில் அடி பகுதி விழுந்த இடம் கும்பகோணம், இரண்டாம் பகுதி விழுந்த இடத்தில் இருக்கும் ஈசனுக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். மூன்றாம் பகுதி மேல் பகுதி விழுந்த இடம் இந்த திருத்தலம் இருக்கும் இடம் குடவாயில் என்று பெயர் பெற்றது.
பங்குனி மாதத்தில் சிவபெருமானின் மீது மூன்று தினங்கள் சூரியவொளி விழுவது அதிசயமாக கருதப்படுகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு ஆதி கஜநாதர் என்று பெயர். இங்கு நடைபெறும் மாசி மகம் திருவிழாவின் போது சிவபெருமான், அம்பாள் பெரியநாயகி, சண்டிகேஸ்வரர், முருகபெருமான், விநாயகர் ஆகியோர் அமிர்த தீர்த்தத்திற்கு தீர்த்தவாரி திருவிழாவிற்கென வருகை புரிவது பெரும் சிறப்பாகும்.
இந்த அமிர்த தீர்த்தத்தை தொட்டால் முற்பிறவி வினைகள் நீங்கும். மேலும் கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும். சிவராத்திரியில் இங்கு தீர்தத நீராடினால் பல அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.