ஒவ்வொரு பலாசுளையும் லிங்க வடிவிலேயே காய்க்கும், தமிழகத்தின் அதிசய சிவாலயம் !

திருக்குற்றால நாத சுவாமி திருக்கோவில்

Update: 2021-11-25 00:30 GMT

குற்றாலத்தில் இருக்கும் திருக்குற்றால நாத சுவாமி திருக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம் ஆகும். இது குற்றால நீர் வீழ்ச்சி அருகே அமைந்துள்ளது பார்ப்பதற்கும் வழிபடுவதற்கும் மனதிற்கு இதமான உணர்வை வழங்கும். இங்குள்ள மூலவரின் பெயர் திருக்குற்றால நாத சுவாமி. அம்பிகையின் பெயர் குழல் வாய்மொழி. இங்கு ஆதிபராசக்திக்கென்று பிரத்யேக சந்நிதியும் உண்டு.

இது அம்பிகையின் சக்தி பீடங்களுள் முக்கியமான ஸ்தலமாகும். இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. மேலும் அருவிகளின் மேல் புறம் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன. இவை அருவி நீரின் மூலம் மூலவருக்கு அபிஷேகம் செய்வதை போன்ற அமைப்பு கொண்டதாகும். தேவாரம் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களுள் இதுவும் ஒன்று.

ஐம்பூதங்களையும் குறிக்கும் லிங்கங்களையும் இங்கே ஒருங்கே தரிசிக்கலாம். மேலும் திருக்குற்றாலம் நடராஜ பெருமானின் ஐந்து பஞ்ச சபைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிதம்பரம், மதுரை, திருவளங்காடு, திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில் பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை மற்றும் சித்ர சபை ஆகிய ஐந்து சபைகள் அமைந்துள்ளன. அதில் குற்றாலத்தின் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. இங்குள்ள நடராஜர் சித்திரமாக அருள் பாலிக்கிறார்.

குற்றால அருவியில் குளிக்க செல்லும் முன் சிவபெருமானை வணங்கி செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இங்குள்ள கோவிலின் வடிவம் சங்கு வடிவத்தில் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்புகளுள் ஒன்று. ராஜ ராஜ சோழனால் இக்கோவில் முதன்முதலில் கட்டப்பட்டது . அதன் பின் இங்குள்ள அர்த்த மண்டபம், மஹா மண்டபம், தேவிக்கு தனிக்கோவில் ஆகிய மற்றவை பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டதாகும்.

முன்னொரு காலத்தில் சிவன் மற்றும் பார்வதி அம்மையின் திருக்கல்யாணம் கைலாயத்தில் நிகழ்ந்த போது தேவாதி தேவர்களும் அந்த அற்புத காட்சியை காண கைலாயத்தில் குவிந்ததால் பூமியின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. எனவே பூமியை சமநிலை படுத்த சிவபெருமான் அகத்தியரை தெற்கு நோக்கி சென்று நிற்குமாறு பணித்தார். அப்போது அய்யனின் திருமண கோலத்தை தான் காண முடியாது போகுமே என்ற வருத்தத்துடன் அகத்தியர் இந்த தலத்தில் வந்ததாகவும். இங்குள்ள விஷ்ணு பெருமானை திருத்தி சிவனை தரிசித்ததாகவும் ஐதீகம்.

இங்கே இருக்கும் நடராஜர் நிர்த்திய தாண்டவம் நிகழ்த்துபவராக இருக்கிறார். இந்த தலத்தின் ஸ்தல விருட்சம் பலா மரம் ஆகும். இதில் காய்க்கும் கனிகளை யாரும் பறிப்பதில்லை. இதிலிருக்கும் மற்றோரு அதிசயம் பலாக்கனிகள் லிங்க வடிவிலும், அதன் சுளைகள் லிங்க வடிவிலுமே காய்ப்பது நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. இதனையே குற்றால குறவஞ்சியில் "சுளையெலாஞ் சிவலிங்கம் " என போற்றி பாடியுள்ளனர்.

Image : cuttralanathar Temple

Tags:    

Similar News