திருமண தடை நீங்க திருமணஞ்சேரியில் செய்ய வேண்டிய கல்யாண அர்ச்சனை!

Update: 2022-12-10 00:45 GMT

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மூலவரின் பெயர் உத்வாகநாதர், இங்கிருக்கும் அம்பாளுக்கு கோகிலா என்பது திருப்பெயர். இந்த கோவிலுக்கு கல்யாணசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில் என்ற பெயரும் உண்டு. திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். குறிப்பாக தேவாரம் பாடப்பெற்ற 275 தலங்களுள் இது முக்கியமானது.

இக்கோவிலை சோழ சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த செம்பியன்மாதேவி கட்டினார். திருமண சார்ந்த தடைகள் இருப்பவர்கள் இக்கோவில் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. எந்தவொரு காரணத்திலும் ஒருவருக்கு திருமண தடை இருக்குமாயின், குறிப்பாக நட்சத்திர தோஷங்கள் மற்றும் இதர ஜாதக பிரச்சனைகள் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கி மகிழ்ச்சியான இல்வாழ்கை அமையும் என்பது நம்பிக்கை.

வருடந்தோரும் சித்திரை மாதம் வரும் பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் மூன்று நாட்கள் நடப்பது வழக்கம். இந்த விழா இந்த ஊரில் பெரும் விமர்சையாக கொண்டாடப்படும் விழாவாகும். இந்த சமயத்தில் மொத்த ஊரும் திருமண வைபவத்திற்கு தயாராகும் தோரணையில் இருப்பார்கள். இந்த கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பாக இந்த கோவிலில் இருக்கும் கோகிலாம்பாள் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

திருமண ஆசிர்வாதத்திற்கு பெயர் போன கோவில் இது. எப்பேற்ப்பட்ட திருமண தடையும் இங்கு வந்தால் தீரும் என்பார்கள். இங்கு செய்யப்படும் கல்யாண அர்ச்சனை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. திருமண அருள் வேண்டி இங்கு வரும் பக்தர்களும், திருமணம் முடிந்த பின் வேண்டுதல் நிறைவேற்ற வருபவர்களும் இந்த கல்யாண அர்ச்சனை செய்வது வழக்கம். இந்த அர்ச்சனையில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாலை, இரண்டு தேங்காய் மற்றும் விபுதி,குங்குமம், எலும்பிச்சை உள்ளிட்ட பொருட்களும் குறிப்பாக கற்கண்டும் இருப்பது உண்டு.

ஒரு முறை மன்மதன் சிவபெருமானின் தவத்தை கலைக்கும் பொருட்டு அவர் மீது அம்பு எய்தார். தியானத்தை கலைத்ததில் சினமுற்ற சிவன் மன்மதனை தன் அனல் பார்வையால் பஸ்பமாக்கினார். தன் கணவரின் நிலை கண்டு கண்ணீர் மல்க சிவனை வேண்டினால் ரதி. ரதியின் வேண்டுகோளுக்கு மனமிறங்கிய சிவபெருமான் மீண்டும் அவருக்கு உயிர் பிச்சை வழங்கி ரதிக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தார் என்றொரு புராணக்கதை உண்டு. மேலும் சிவனை மணக்க எண்ணி தவமிருந்த பார்வதி அம்பாளுக்கு திருமணமான தலமிது என்றும் சொல்வர். திருமணம் ஆன சேரி , சேரி என்பது ஊர் அல்லது கிராமம். அதனாலேயே இத்தலத்திற்கு திருமணஞ்சேரி என்ற பெயர் உண்டானது.

Tags:    

Similar News