கிள்ளிவளவனால் வெட்டுபட்ட காயம் இன்றுமிருக்கும் அதிசய முல்லைவனநாதர் ஆலயம் !

Update: 2021-12-25 00:30 GMT

முல்லைவனநாதர் கோவில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமுல்லைவாசல் என்னும் பகுதியில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும். இந்த திருத்தலத்தை கட்டியவர் முன்னாள் சோழர்களுள் ஒருவரான கிள்ளிவளவன். இங்கிருக்கும் சிவபெருமானுக்கு முல்லைவன நாதர் என்பது பெயர். அம்பாள் அணிகொண்ட கோதை அம்மை என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இத்தலம் தேவாரம் பாடப்பெற்ற 275 தலங்களுள் ஒன்றாகும். காவேரி ஆற்றின் கரையோரத்தில் வடப்புறத்தில் அமைந்துள்ள கோவில்களுள் ஒன்று இது.

இத்தலம் குறித்து சொல்லப்படும் வரலாறு யாதெனில், முன்னொரு காலத்தில் கரிகால சோழனின் பாட்டனரான கிள்ளிவளவன் தோல் நோயால் அவதியுற்றிருந்தார். தன்னுடைய இடர் நீங்க சிவாலயங்களில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. இக்கோவில் அமைந்திருக்கும் பகுதி கடலை ஒட்டிய இடம் ஆகும். எனவே அக்கடலில் நீராட தன் படைகளுடன் கிள்ளி வளவன் வந்த போது. இந்த இடம் முழுவதும் முல்லை கொடிகளால் நிரம்பி முல்லை காடாக இருந்தது. இந்த கொடிகளுக்கிடையே குதிரை படையால் செல்ல முடியவில்லை. கொடிகளுக்கிடையே குதிரையின் கால் சிக்கி கொண்டது. அதை நீக்க தன் வாளால் கொடியை வெட்ட முற்பட்ட போது, வாளின் நுனி சுயம்பு மூர்த்தியான ஈசனின் மீது பட்டு இரத்தம் பெருக்கெடுத்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்தி தன்னையே மாய்த்து கொள்ள முற்பட்டான் கிள்ளிவளவன்.

அந்த நேரத்தில் தோன்றிய அம்மையும் அப்பனும் ரிஷாபாரூடன் கோலத்திலே காட்சியளித்தார்கள் என்பது வரலாறு. இந்த இடத்தின் தன்மையால் தான் இந்த இடத்திற்கு திருமுல்லை வாசல் என்ற பெயரும், இறைவனுக்கு முல்லைவன நாதர் என்ற திருநாமமும் வந்தது.

அதுமட்டுமின்றி இத்தலம் குறித்து சொல்லபடும் மற்றொரு அதிசயம் யாதெனில். மற்ற சிவ தலங்களை போல இங்கே பள்ளியறை, மற்றும் அது சார்ந்த பூஜை இல்லை. காரணம், பஞ்சாட்சர மந்திரத்தை அறிய வேண்டுமென அன்னை பார்வதி தேவி விரும்பினார். அதையே வேண்டி இங்குள்ள சிவனை வழிபட்டார் அப்போது சிவபெருமான் இத்திருத்தலத்தில் குருவாக அவதரித்து அம்மந்திரத்தை அம்மனுக்கு உபதேசித்தார். இந்த காரணத்தினாலே இங்கு பள்ளியறை கிடையாது.

கிள்ளிவளவனால் வெட்டுபட்ட காயத்தை இன்றும் சிவலிங்கத்தில் காணலாம் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள கிணற்றில் கங்கை வசிப்பதாக நம்பப்படுகிறது. சோழ மன்னனின் பிரமஹத்தி தோசத்தை நீக்கிய தலம் என்பது கூடுதல் சிறப்பு.

Tags:    

Similar News