ஆற்று மணலை அன்னமாக மாறிய அதிசயம்! தீரா வறுமையை தீர்க்கும் திருவாப்பனூர்!
மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன் கோவிலின் நிழலில் அமைந்துள்ளது திரு ஆப்பனூர் கோவில். அதாவது மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ர இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை திருவாப்புடையார் கோவில் என்றும் அழைப்பர்.
தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் இக்கோவிலும் ஒன்றாகும். பாண்டிய மன்னர்களும் சேதுபதி அரசரும் இக்கோவிலுக்காக பல பங்களிப்பை செய்துள்ளனர். இக்கோவிலை முதன் முதலில் கட்டியவர்கள் பாண்டிய மன்னர்கள். பின் நாயக்க மன்னர்களால் புணரமைக்கப்பட்டது. இங்கு மூலவரின் திருப்பெயர் ஆப்புடையார் என்பதாகும். இதுமட்டுமின்றி ரிஷபுரேசர், அன்னவிநோதன் மற்றும் ஆப்புனூர் நாதர் என்ற பல பெயர்கள் இவருக்கு உண்டு.
இங்கிருக்கும் அம்பாளுக்கு சுகந்த குந்தாளாம்பிகை என்பது திருப்பெயர். இந்த கோவிலில் சிவபெருமான் கிழக்கை நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இடையே சுப்ரமணியருக்கு ஆலயம் உண்டு. அதனாலேயே இந்த தலத்திற்கு சோமஸ்கந்தர் ஆலயம் என்ற பெயரும் உண்டு.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் தலவரலாரு யாதெனில், சோழந்தகன் எனும் மன்னன் தீவிரமான சிவபக்தன் ஆவான். எப்போதும் சிவனுக்கு பூஜை செய்த பின் உணவு உட்கொள்ளும் பழக்கம் அவனுக்கு உண்டு. ஒரு முறை வேட்டையாட சென்ற போது சில காரணங்களால் மயங்கி விழுந்தான். அப்போது அவனோடு இருந்த பாதுகவலர்கள் அவனை உண்ண சொல்லி வற்புறுத்தினர். ஆனால் சிவனுக்கு பூஜை செய்யாது நான் உண்ண மாட்டேன் என சொல்லி உறுதியாக இருந்தான் மன்னன். இதை கண்ட மந்திரி ஒருவர், ஒரு மரத்துண்டை அப்பு போல நிலை கொள்ள செய்து அதை சுயம்பு லிங்கம் என பொய்யுரைத்து மன்னனை நம்ப வைத்தார். மன்னனும் நம்பி உண்டுவிட்ட பின் அவனுக்கு அது ஆப்பு என தெரியவரவும், சிவனே என் பக்தி உண்மையாயின் நீ இந்த ஆப்பு ரூபத்தில் வந்து எனக்கு அருள் பாலிக்க வேண்டும் என வேண்டினார். அவர் வேண்டுகோலை ஏற்று சிவபெருமான் காட்சி கொடுத்ததால் திருஆப்பு நாதர் என அழைக்கப்படுகிறார்.
ஒருமுறை இந்த ஊரில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக அர்ச்சகர் ஒருவர் ஆற்று மணலை சமைக்க எண்ணினார். சிவனின் அருளால் ஆற்று மனல் அன்னமாக மாறியது. அதனாலேயே இவருக்கு அன்னவிநோதன் என்ற பெயரும் உண்டு.
செல்வ வளம் பெருக இங்குள்ள சிவபெருமானையும், செவ்வாய் பிரச்சனை தீர இங்குள்ள முருகபெருமானையும் வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.