ஈசனை பித்தா என்றழைத்த ஆச்சர்ய திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் ஆலயம்

Update: 2022-02-22 01:19 GMT

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவெண்ணை நல்லூர். அவ்வூரில் அமைந்துள்ளது தான் கிருபாபுரீஸ்வரர் ஆலயம். மிகவும் புகழ்பெற்ற தேவார பாடலான "பித்தா பிறை சூடி " எனும் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம் இது. திராவிட கட்டிடக்கலை அம்சத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் சோழர்களால் கட்டப்பெற்றது ஆகும்.

இங்கிருக்கும் மூலவருக்கு கிருபாபுரீஸ்வரர் என்றும் இங்கிருக்கும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்றும் பெயராகும். மகிசாசுரனை வதைத்த பின் அம்பிகை கடும் உக்கிரம் கொண்டிருந்ததால் அந்த உக்கிரம் தணிய இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சாந்தம் பெற்று மங்களமடைந்ததாலேயே மங்களாம்பிகை என்று பெயர் வந்தது என்பது ஐதீகம்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், சுந்தரர் திருமண கோலத்தில் திருநாவலூரில் இருந்த போது சிவபெருமான் வயதான பெரியவர் வேடம் தரித்து அங்கு நடக்கவிருக்க திருமணத்தை தடுத்து நிறுத்தினார். சுந்தரரை ஆட்கொள்ள் ஒரு நாடகமும் ஆடினார். அதாவது பெரியவர் வேடத்தில் வந்த சிவபெருமான், சுந்தரர் தனக்கு அடிமை என்று வாதாடினார். அதற்கு ஆதாரமாக ஒரு ஓலைச்சுவடியொன்றையும் காட்டினார். வேறு வழியின்றி பெரியவரின் சேவகராக வந்த சுந்தரர் கடுமையான கோபத்தில் பெரியவரை பித்தா என்று வசைப்பாடினார்.

சிறிது நேரத்திற்கு பின் வந்திருப்பது சிவபெருமான் என்று தெரியவரவே, அவரை பித்தா என்று கூறி திட்டிவிட்டோமே என வருந்திய போது. அந்த வசையையும் மனதார ஏற்று அதையே முதல் வார்த்தையாக கொண்டு பதிகம் பாடுமாறு கூறினார் சிவபெருமான். அப்போது பாடப்பெற்றதே "பித்தா பிறைசூடி பெருமானே "எனும் பாடல்.

இன்றும் பஞ்சாயத்து நடந்த மண்டபத்தை இக்கோவிலில் காணலாம். அதுமட்டுமின்றி பெரியவராக வந்த முதியவர் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி விட்டு கருவறை புகுந்து சிவபெருமானாக மாறியதன் அடையாளமாக அந்த திருப்பாத ரட்சையின் அடையாளம் கூட இன்றளவும் இங்குள்ளாது.

அரிதினும் அரிதாக இங்குள்ள பிள்ளையாருக்கு பொல்லா பிள்ளையார் என்று பெயர். இங்கிருக்கும் முருக பெருமான் "சண்முகநாதர் "என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இந்த சண்முகநாதர் அருணகிர நாதரால் பாடப்பெற்றவர் ஆவார்.

Tags:    

Similar News