கைகூப்பி வணங்குபவருக்கு கருணை மழை பொழியும் கருமாரியின் அதிசயங்கள்!
தேவி கருமாரி திருக்கோவில், திருவேற்காடு
சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ளது தேவி கருமாரியம்மன் ஆலயம். இக்கோவில் அன்னை பராசக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். அம்பாள் கருமாரியம்மன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறாள். மேலும் மரத்தால் ஆன அம்மன் திருச்சிலை இங்கு உள்ளது. அதற்கு தனி சன்னிதியும் உண்டு. அந்த அம்மனை மரச்சிலை அம்மன் என்று அழைத்து மக்கள் வழிபடுகின்றனர்.
இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அம்மன் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் தல விருட்சமாக வெள்வேலம் மரம் உள்ளது. இத்தலத்தின் புராண பெயர் வேலங்காடு, அதிகமான தெய்வீக வேர்கள் நிரம்பிய வனமாக இருந்ததால் திருவேற்(வேர்)காடு என்ற பெயர் இந்த இடத்திற்கு நிலைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் குறித்து நாம் அறிந்திருப்போம். இக்கோவிலின் சிறப்பம்சமாக திருவேற்காடு தேவாரம் என்ற பெயரில் திருஞானசம்பந்தர் வேற்காடு தலத்தை பாடியுள்ளார்.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், ஆதியில் இக்கோவிலில் இருந்த புற்றை தான் மக்கள் தெய்வமாக நினைத்து வழிபட்டு வந்தனர். அப்போது பக்தரொருவரின் கனவில் தோன்றிய அம்பாள் தற்போது புற்றிருக்கும் இடத்தில் தனக்கு கோவில் கட்டுமாறு தெரிவித்தார். இதனை ஏற்று புற்றிருக்கும் இடத்தை அகற்ற முற்பட்ட போது அங்கு சுயம்பாக அம்மன் எழுந்தருளினால். எந்த கருவிலும் உதிக்காமல், சுயம்பாக எழுந்தருளியதால் அம்பாளுக்கு கருவில் இல்லாத கருமாரி என்ற பெயரும் உண்டு.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாக இக்கோவில் வருடத்தின் இரு நாட்கள் அம்பாளின் மீது சூரியவொளி விழுகிறது. இதற்கு சொல்லப்படும் புராணம் யாதெனில், ஒரு முறை சூரியனுக்கு குறி சொல்வதற்காக அம்பாள் உருமாறி சென்ற போது அவரை அடையாளம் கண்டு கொள்ளாமல் சூரியன் அம்பாளை அவமதித்து விட்டதாகவும். இதனால் அந்த இடத்தை விட்டு கருமாறி அகன்றவுடன் சூரியனின் ஒளி குன்றி விட்டதாம். இதனால் அம்பாளிடம் மன்னிப்பு கேட்ட போது சூரியனுக்கு உகந்தநாளாம் ஞாயிற்றுகிழமை தனக்குரிய நாளாக கொண்டாடப்பட வேண்டும் என அன்னை கேட்டு கொண்டதால். இக்கோவிலில் ஞாயிற்று கிழமை கருமாறி தினமாகவே இன்றும் மக்கள் வழிபடுகின்றனர்.
அன்னையிடம் வழிபட்டு வேப்பிலை பிரசாதம் எடுத்து சென்றால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். பெளர்ணமி தோறும் நடைபெறும் 108 விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம், திருமண வரம் என கேட்போருக்கு கேட்டதை வணங்கும் அன்னை, ராகு தோஷங்களையும் நீக்குகிறார். ராகு, கேது தோசம் இருப்பவர்கள் இங்குள்ள புற்றுக்கு பால் வார்ப்பதன் மூலம் அந்த தோஷங்களிலிருந்து விடுபடலாம்.