வீடு கட்டும் முன் பூமி பூஜைக்கு முன்பாக வணங்க வேண்டிய ஆச்சர்ய கோவில்

Update: 2022-12-13 00:30 GMT

காழிச்சீராம விண்ணகரம் அல்லது திருவிக்ரம பெருமாள் கோவில் என்பது விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம். தமிழகத்தில் சீர்காழி பகுதியில் அமைந்துள்ளது. திராவிட கட்டமைப்பு முறைப்படி கட்டப்பட்ட இத்திருத்தலம் திவ்யபிரபந்தத்தில் பாடப்பெற்று ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவில்களில் ஒன்றாகும். இங்கிருக்கும் விஷ்ணு பெருமானுக்கு திருவிக்ரமர் என்பதும் தாயார் மகாலட்சுமிக்கு லோகநாயகி என்பது திருப்பெயராகும். சோழர்களால் கட்டப்பட்ட இந்த திருத்தலம் பின்னாளில் விஜயநகர பேரரசு மற்றும் மதுரை நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது.

இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதிக்கு தாடாளன் கோவில் என்று பெயர். இந்த கோவில் வளாகத்தினுள் மூன்று முக்கிய சந்நிதிகள் ஒன்று மூலவரான திருவிக்ரமர், தாயார் லோகநாயகி மற்றும் ஆண்டாள் நாச்சி. மேலும் இந்த கோவிலின் முன் மண்டபத்தில் வராக அவதாரத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வலக்கையை தானம் பெற்றப்படி வைத்து கொண்டு, இடக்கையில் குடையை ஏந்தி, இருக்கிறார். திருவிக்ரம ரூபம் என்பது வாமன அவதாரத்தின் போது, மாவலி சக்ரவர்த்தியின் அகங்காரத்தை போக்க விஷ்ணு பெருமான் சிறுவனாக மாவலியிடம் மூன்றடி மண் வேண்டி நின்றார்.

அப்போது தன் முதல் அடியால் இந்த பூவலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகையும் அளந்த பெருமாள் மூன்றாம் அடியை எங்கே வைக்க என வினவி நின்ற அந்த விஸ்வரூப தரிசனம் தான் திருவிக்ரம ரூபம் என்பது. அந்த வகையில் இந்த பிரபஞ்சத்தையே தன் திருவடிகளால் அளந்தவர் என்பதால், புதிதாக நிலம், இடம் வாங்குவோர் மற்றும் வீடு கட்டும் முன் வாஸ்து பூஜை செய்வோர் தங்கள் நிலத்து மண்ணின் கைப்பிடி அளவு மண்ணை எடுத்து வந்து இங்கு வைத்து வணங்குவது வழக்கம்.

அது மட்டுமின்றி "தாள்" என்றால் உலகம் என்று பொருள் "ஆளன்" என்றால் ஆள்பவன் என்று பொருள் எனவே "தாளாளன்" என்பது மருவி "தாடாளன்" என்று ஆண்டாள் பெருமாளை போற்றி பாடினாள். அதனாலேயே இங்கிருக்கும் உற்சவருக்கு தாடாளன் என்று பெயர். மேலும் விஷ்ணு பெருமாள் மார்பில் லட்சுமி தேவி இருப்பதை இருப்பதை போல, இங்கிருக்கும் லோகநாயகி தேவியின் நெஞ்சில் விஷ்ணு பெருமான் திருவிக்ரம ரூபத்தில் காட்சி தருகிறார். இங்கிருக்கும் அன்னையை தரிசித்தால் கணவன் மனைவி உறவு மேம்படும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News