சிவபுரி உச்சிநாதர் கோவில் இக்கோவில் திருநெல்வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த தலத்தில், மூலவர் உச்சிநாதர் என்ற திருப்பெயரில் அழைக்கப்படுகிறார், அம்பாள் பெயர் உச்சிநாயகி. தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அம்மைந்துள்ளது இக்கோவில் வளாகம். மூன்று கால பூஜையும், ஆண்டில் நான்கு திருவிழாவும் இங்கே விஷேசமாகும். குறிப்பாக வைகாசி விசாக பெருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
புராணங்களின் படி சிவனும் பார்வதியும் அகஸ்தியருக்கு காட்சி அளித்த ஸ்தலமாகும். நெல்லால் சூழ்ந்திருந்த பகுதி என்பதால் திருநெல்வாயில் என்ற பெயர் இந்த இடத்திற்கு நிலைத்தது. அதுமட்டுமின்றி இந்த பகுதிக்கு மற்றொரு முக்கிய புராணக்கதையும் உண்டு.
சீர்காழியில் பிறந்த குழந்தையான சம்பந்தருக்கு, தெய்வ பால் ஊட்டினார் அன்னை பார்வதி தேவி. சம்பந்தரின் தந்தை குழந்தையை குளத்தின் அருகே அமர செய்து விட்டு நீராட சென்ற போது குழந்தை பசியில் "அம்மே அப்பா" என்று அழுகவே, தாய் பார்வதி தேவி ஞான பால் ஊட்டினார். அப்பேற்ப்பட்ட தெய்வீக குழந்தையான சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது . திருமணம் ஆச்சள்புரத்தில் நடைபெற இருந்தது. அப்போது திருமண ஏற்பாடுகளுக்காக ஒரு குழுவாக ஆச்சள்புரம் நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது நல்ல மதிய வேளை சம்பந்தரின் திருமணத்திற்கு வந்தவர்கள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த சிவபெருமான், கோவில் பணியாளர் வடிவில் வந்து வந்திருந்த அனைவருக்கும் உணவளித்தார்.
வந்து உணவளித்தது இறைவன் தான் என்பதை அறிந்த சம்பந்தர், மதிய வேளையில் தோன்றியதால் உச்சிநாதர் என்று அழைத்து போற்றினார். அதனாலேயே இக்கோவில் மூலவருக்கு உச்சிநாதர் என்று பெயர், அதுமட்டுமின்றி இவரை மத்தியானேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
இந்த கோவிலில் குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டும் வைபவம் நடைபெறுவது விஷேசமாக கருதப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து குழந்தைக்கு முதல் உணவு ஊட்டுகின்றனர்..
சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் சிவபுரியில் இக்கோவில் அமைந்துள்ளது.