தேவசிற்பி விஸ்வகர்மா வடித்த ஆச்சர்ய திருவுருவம்உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்!

Update: 2021-03-28 00:00 GMT

கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற உடுப்பி ஶ்ரீ கிருஷ்ணர் கோவில். இந்த இடத்தில் அமைந்துள்ள மடத்தை பார்ப்பதற்கு ஆசிரமத்தை போன்ற தோற்றம் ஏற்படும். இந்த கோவிலை சுற்றி ஏராளமான கோவில்கள் இருப்பது இப்பகுதியின் தனிச்சிறப்பு.



இந்த கோவிலில் இருக்கும் தீர்த்த குண்டத்தின் பெயர் மத்வபுஷ்கர்ணி என்பதாகும். இங்கு தான் சந்திரன் தன்க்கு ஏற்பட்ட சாபம் நீங்க தன்னுடைய 27 மனைவிகளான நட்சத்திரங்களுடன் வந்து வணங்கி சாப விமோசனம் பெற்றான். உடு என்றால் நட்சத்திரம் பா என்றால் தலைவன். உடுபா என்பதே மருவி பின்னாளில் உடுப்பி ஆனது எனவும் கொள்ளலாம். சந்திரன் தன் சாபம் நீங்க இங்கு வந்து வழிபட்டதாலும், ஶ்ரீ கிருஷ்ணரே நட்சத்திரங்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பதாலும் இந்த பெயர் உருவானது.

இந்த கோவில் 13 ஆம் நூற்றாண்டில் வைஷ்ணவ குருவான ஜகத்குரு ஶ்ரீ மாதவாச்சாரி அவர்களால் தோத்ற்றுவிக்கப்பட்டது. வேதாந்தாவின் த்வைத்த பள்ளியை தோற்றுவித்தவரும் இவரே ஆவார். இந்த கோவிலின் வரலாறு மிக சுவரஸ்யமானது. ருக்மணி தேவிக்கு கிருஷ்ண பகவான் சிறு வயதில் எப்படியிருப்பார் என்று பார்க்க விருப்பம் வந்தது. இதனை தேவ சிற்பி விஸ்வகர்மாவிடம் அழைத்து சொன்னபோது அவருடைய விருப்பத்தின் பெயரில் சாளக்கிராம கல்லில் வலது கையில் தயிர்மத்துடனும், இடது கையில் வெண்ணையும் இருப்பது போன்ற திருவுருவத்தை விஸ்வகர்மா படைத்தருளினார்.



இந்த திருவுருவச்சிலை ருக்மணி தேவியால் பூஜிக்கப்பட்டு வந்த நிலையில் துவாரகை கடலில் மூழ்கிய போது பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்த சிலை மத்வருக்கு கிடைத்து, மத்வராலேயே இந்த திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த உடுப்பி கிருஷ்ணருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வழிபட எட்டு சீடர்களை மத்வர் நியமித்தார். இந்த எட்டு சீடர்களும் எட்டு மடங்களை அதாவது, கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம் ஆகியவைகளை நிர்மாணித்து வந்தனர். இந்த எட்டு மடங்களில் ஒவ்வொரு மடமும், இரண்டு மாதங்கள் இந்த கோவிலை நிர்வகிக்க வேண்டும் என்கிற செயல்முறை மத்வர் அவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு யாதெனில், இங்கிருக்கும் கனகதாசருக்கு சில காரணங்களால் இந்த கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது அவர் உடுப்பி கோவிலின் கருவறைக்கு பின்பு நின்று கொண்டு வீணை மீட்டி மனமுருக பாடி வேண்டுவார். இதனை தொடர்ந்து கோவிலின் பின்பக்க சுவர் தாமாகவே இடிந்து, கிருஷ்ணர் தன் உருவத்தை திருப்பி கனகதாசருக்கு காட்சியளித்தார். கனகதாசர் கண்ணனை வணங்க ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னல் போன்ற பலகணி என்ற அமைப்பு உருவானது. இதனை கனகதண்டி என அழைக்கிறார்கள். இன்றும் பக்தர்கள் இந்த பலகணி வழியாகவே மூலவரான கிருஷ்ணரை வழிபட முடியும் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

Tags:    

Similar News