மும்மூர்த்திகள் தரிசனம் தரும் அரிய திருத்தலங்களுள் ஒன்று உத்தமர் ஆலயம் !

Update: 2021-11-17 00:30 GMT

திருச்சியில் அமைந்துள்ளது உத்தமர் கோவில். இக்கோவிலை திருக்கரம்பனூர் அல்லது பிக்‌ஷாந்தர் கோவில் என்றும் அழைப்பர். திராவிடர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது இக்கோவில். இந்த கோவில், திருமங்கையாழ்வரால் மங்களாசனம் செய்யப் பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் விஷ்ணு பெருமானின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கு பெருமான் புருஷோத்தம் என்ற பெயரிலும், அன்னை இலட்சுமி தேவி பூரணவள்ளி என்ற பெயரிலும் எழுந்தருளியுள்ளனர்.

இங்கு அருள் புரியும் புருஷோத்தமர், பிரம்மரின் தலையை கொய்ததால் சிவனுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்க வழிவகை செய்தவர் ஆவார். அதனாலேயே வரலாற்று அதிசயமாக, இந்த கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, மற்றும் விஷ்ணுவிற்கு இங்கே கோவில் உண்டு. இது போன்ற மும்மூர்த்திகளின் காட்சியை தமிழகத்தில் ஹரசாப விமோச்சன பெருமாள் கோவிலில் மட்டுமே காண முடியும். இந்த கோவில், சோழர்களாலும், பிற்காலத்தில் விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயகர்களாலும் கட்டப்பட்டது என்கின்றன வரலாற்று குறிப்புகள்.

ஆறு கால பூஜை மற்றும் ஆண்டுக்கு நான்கு முக்கிய விழாக்கள் இங்கே கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் நிகழும் பிரம்மோற்சவ திருவிழா மிகவும் பிரபலமான ஒன்று. இந்த விழாவின் போது புருஷோத்தமர் மற்றும் பிக்‌ஷாந்தர் ஆகிய இருவரும் வீதியை சுற்றி இணைந்தே வலம் வருவார்கள். புராணங்களின் படி விஷ்ணு பெருமான் கதம்ப மரமாக இங்கே தோன்றினார், அதனாலேயே இக்கோவிலுக்கு கதம்பனூர் என்ற பெயர் வந்தது. இதுவே மருவி கரம்பனூர் என்றானது. திருமங்கை ஆழ்வார் அவர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கரம்பனூர் உத்தமன் என்றே இப்பெருமான் அழைக்கப்படுகிறார்.

ஒரு முறை பிரம்ம தேவரின் பக்தியை பரிசோதிக்க விஷ்ணு பெருமான் கதம்ப மரமாக தோன்றியதாகவும், அப்போது விஷ்ணுவை வழிபட திருமஞ்சனத்தை பிரம்மர் அர்ப்பணித்த போது, அந்த நீரே பெருகி கதம்ப தீர்த்தம் ஆனது.

மேலும் மற்ற கோவில்களை போல இல்லாமல், சிவபெருமான் இங்கே குரு தக்‌ஷிணாமூர்த்தி கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவிலில் ஏழு சப்த குருமார்களை தரிசிக்க முடியும். இக்கோவிலின் கதம்ப திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் ஒன்று. இங்கு விஷ்ணு பெருமான், தீர்த்தவாரியான கதம்ப குளத்திலிருந்து ரங்கநாதர் கோலத்தில் எடுத்து வரப்பட்டு, வழிபடப்படுகிறார்.

Image : triphobo 

Tags:    

Similar News