ஆயிரம் ஆண்டு அதிசயம்! அன்னைக்கு ஈசன் ரகசியம் உபதேசித்த ஆச்சர்ய தலம்.
மங்களநாதர் திருக்கோவில், உத்திரகோச மங்கை, ராமநாதபுரம்
உத்திரகோசமங்கை கோவிலை மங்களநாத சுவாமி திருக்கோவில் என்றும் அழைப்பர். இக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலில் மங்களநாதர் மூலவராகவும், அம்பாள் மங்களாம்பிகையாகவும் அருள் பாலிக்கிறார். இக்கோவிலின் தனித்துவ அம்சமாக 6 அடி உயரமுள்ள பழமையான மரகத நடராஜர் இங்கே இருக்கிறார்.
இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று புராணங்கள் சொல்கின்றன. இக்கோவில் குறித்து புகழ்பெற்றா சொலவடை ஒன்று சொல்லப்படுவதுண்டு "மண் முந்தியோ அல்லது மங்கை முந்தியோ" என்பார்கள். எனில் இந்த நிலத்தின் மண் முதல் தோன்றியதா இல்லை இங்குள்ள அம்பாள் முதலில் தோன்றினாளா என்பது இதன் அர்த்தம். அதாவது அத்தனை பழமை வாய்ந்த கோவில் இது. இங்கு அம்பாளுக்கு சிவபெருமான் வேத ரகசியத்தை உபதேசித்தார் என்பது நம்பிக்கை. உத்திரம் என்றால் உபதேசம் என்று பொருள், கோசம் என்றால் ரகசியம் என்று பொருள் ரகசியத்தை பார்வதி மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம்உத்திர கோச மங்கை என போற்றப்படுகிறது.
ராமநாதபுரத்திலிருந்து 17 கி.மீ மேற்கிலும் பரமக்குடியிலிருந்து 32 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தினுள் ஏராளமான சந்நிதிகள் உண்டு, குறிப்பாக 1000 லிங்கமிருக்கும் சகஸ்ரலிங்கம் இங்கு உண்டு. இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், இராவணின் மனைவி மண்டோதரி திருமணத்திற்கு முன்பு தனக்கு தீவிரமான சிவபக்தன் தான் மணாளனாக கிடைக்க வேண்டுமென தவமிருந்தார். அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் இராவணனை அவளுக்கு அடையாளம் காட்ட காட்சி தர வந்த போது தன்னிடமிருந்த வேத நூல்களை ரிஷிகளிடம் கொடுத்து தான் திரும்ப வரும் வரை பாதுகாக்க சொன்னார். சிவபெருமான் இராவணனுக்கு அக்னி பரிட்சை வைத்த போது இந்த பிரபஞ்சமே தீபற்றி எரிந்தது, அந்த நெருப்பிலிருந்து வேத நூல்களை காக்க முடியுமோ முடியாதோ என அஞ்சி அனைத்து ரிஷிகளும் தீர்த்ததில் குதித்து இறந்தனர். பின்னாளில் அது அக்னி தீர்த்தம் என அழைக்கப்பட்டது. மாணிக்கவாசகர் ஒருவர் மட்டுமே அந்த வேத நூல்களை காத்தார். அதனால் அவருக்கு லிங்க வடிவை வழங்கி கெளரவித்தார் சிவபெருமான்.
அதனாலேயே இக்கோவிலில் மாணிக்கவாசகருக்கு லிங்க வடிவத்தில் ஆராதனை நடக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த கோவில் மட்டுமே அரிதினும் அரிதாக இறைவனுக்கு தாழம்பூவை சாற்ற முடியும். காரணம் பிரம்ம தேவன் சிவபெருமானின் முடியை கண்டதாக பொய் உரைத்த போது அதற்கு தாழம்பூவை சாட்சியாக வைத்தான். பின் அந்த பொய்யிற்காக சாப விமோசனம் போக இந்த தலத்தில் வணங்கினான் என்பது ஐதீகம். இங்குள்ள நடராஜருக்கு மார்கழியில் ஆருத்ரா திருவிழா நடப்பது பெரும் சிறப்பாகும்.