நடனத்தில் சிவபெருமான் புரிந்த அதிசயம்!திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம்

Update: 2022-01-06 00:30 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாலங்காட்டில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது . இக்கோவில் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட திருத்தலமாகும். இங்கிருக்கும் சிவபெருமானுக்கு வடாரண்யேஸ்வரர் என்பது திருப்பெயர். மற்றும் இங்கிருக்கும் அம்பிகைக்கு வண்டார் குழலி என்று பெயர்.

தேவாரம் பாடல்பெற்ற ஸ்தலங்களுள் இக்கோவில் ஒன்றாகும். இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், சும்பன் மற்றும் நிசும்பன் எனும் இரு அரக்கர்கள், ஆலமரங்கள் நிறைந்த காடான இப்பகுதியை தங்கி வந்தனர். அது மட்டுமின்றி இங்கு தங்கி தேவர்களுக்கு பெரும் தீங்கு இழைத்தனர். இதிலிருந்து விடுபட தேவர்கள் சிவன் மற்றும் பார்வதி தேவியிடம் சென்று மன்றாடினர். பார்வதி தேவி அந்த அரக்கனை அழிக்க சூளுரைத்தாள். அதன் படியே தன் பார்வையாள் மிகவும் ஆக்ரோஷமான காளி உருவை வடித்தாள். அந்த காளி அரக்கர்களை அழித்தாள். அதுமட்டுமின்றி போரின் போது அரக்கர்களை அழிக்கையில் அவர்களின் குருதியை பருகியதால் காளி மிகுந்த ஆக்ரோஷமானவளாக இருந்தாள். ஆக்ரோஷத்தை தணிப்பதற்காக, முஞ்சிகேச கார்கோடக எனும் முனிவர் சிவபெருமானிடம் வேண்டினார். அதன் படியே சிவபெருமான் இத்திருத்தலம் வந்தபோது காளி சிவபெருமானிடம் சாவல் ஒன்றை விடுத்தாள்.

நம் இருவரும் நடனமாடுவோம். அதில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கே இத்திருத்தலம் என்ற போது ஆடியது தான் ஊர்த்துவ தாண்டவம். இந்த நடனத்தின் போது தன் காதில் இருந்த அணிகலன் கீழே விழுக, அதனை சிவபெருமான் தனது இடது கால் கட்டை விரலாலே எடுத்து அதை தன் காதில் மாட்டிக்கொண்டர். இந்த அதிசயத்தை தன்னால் நிகழ்த்த முடியாது என்பதை ஒப்புகொண்டாள் காளி. இருப்பினும் "என்னை போல நிகரானவர் உனக்கு இல்லை. எனவே உன்னை வணங்கி பின் என்னை வணங்கினால் முழு பயன் கிட்டும்" என்று ஆசி வழங்கினார் சிவபெருமான்.

சிவபெருமான் நித்தமும் ஆடும் ஐந்து அம்பலங்களில் இது ரத்தின சபை என்றழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சிவபெருமானின் தீவிர பக்தையான காரைக்கால் அம்மையாரை சிவபெருமான் "அம்மையே " என்று அழைத்த தலம் இது. காரைக்கால் அம்மையார் சிவபெருமான் தன் தலையாலே நடந்து தரிசித்தார் என்பது ஐதீகம். அவ்வாறு சிவபெருமானின் நடனத்தை கண்டு கழித்து அவர் முக்தி பெற்ற தலம் இது என்ற பெருமையும் இக்கோவிலுக்கு உண்டு.

Tags:    

Similar News