கள்ளனாக வந்து பக்தனை காத்த ஆச்சர்ய வைகுண்டநாதர்! ஆலய அதிசயம்

Update: 2022-09-30 00:45 GMT

தமிழத்தில் தூத்துகுடி பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ வைகுண்டநாத பெருமாள் கோவில். இக்கோவிலுக்கு கள்ளபிரான் கோவில் என்ற பெயரும் உண்டு. விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருத்தல திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது திருக்கோவில்களில் இதுவும் ஒன்று. கூடுதலாக வைஷ்ணவ திருத்தலங்களுள் சூரியனுக்கு உகந்த நவகிரக ஆலயமாகவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இங்கிருக்கும் மூலவருக்கு வைகுண்டநாதர் என்பதும் தாயாருக்கு வைகுண்டவள்ளி என்பதும் திருப்பெயராகும். இக்கோவிலின் உற்சவருக்கு கள்ள பிரான் என்று பெயர். இக்கோவிலில் அமைந்திருக்கும் திருவேங்கடமுடையான் மண்டபத்தில் அரிய பல சிற்பங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணம் யாதெனில் ஒரு முறை வைகுண்டநாதரின் பக்தனான காலதூஷகன் திருடுவதை தொழிலாக கொண்டிருந்தான். ஆனால் திருடிய பணத்தில் ஊர் மக்களுக்கு நல்லது செய்வதை வழக்கமாக வைத்திருந்தான். அவன் தவறை கண்டுபிடித்து கைது செய்து அரசவைக்கு அழைத்து வரும் சூழலில் வைகுண்டநாதனே கள்ளனின் வடிவில் வந்து ஒரு நாட்டின் அரசன் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்திருந்தால் தான் திருட வேண்டிய அவசியம் இருக்காது என பேசினார்.

தன் முன் ஒரு கள்ளனால் இவ்வளவு தைரியமாக பேச முடியாது என்பதை உணர்ந்த அரசர் வந்திருப்பது யாரென அறிய முற்பட்ட போது பெருமாளின் தரிசனம் கிடைத்ததாகவும். அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட கள்ளனாக விஷ்ணு பிரான் தோன்றியதால் இக்கோவிலின் உற்சவருக்கு கள்ள பிரான் என்ற பெயர் அமைந்தது.

இக்கோவிலின் தனிச்சிறப்பாக இங்கே 108 போர்வை அலங்காரம் திகழ்கிறது. தை முதல் நாளில் கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் அணிவிக்கப்படும். பின் உற்சவர் கொடிமரத்தை சுற்றி வலம் வருவார். அவர் வந்த பின்பு ஒவ்வொரு போர்வையாக கலைக்கப்படும். இதை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவது உண்டு. இக்கோவிலில் மூன்று முக்கிய தீர்த்தங்கள் உண்டு. அவை முறையே தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம் மற்றும் கலச தீர்த்தம் . பக்தர்களின் துக்கத்தை தீர்க்கும் வைகுண்டநாதர் ஆலயத்தில், பிரார்த்தனை நிறைவேறினால் கருடனுக்கு சந்தன காப்பிடுவது வழக்கம்.

Tags:    

Similar News