தேவாதி தேவர்கள் கூடும் அதிசய திருக்கூடலூர் பெருமாள் கோவில் !
வையம் காத்த பெருமாள் கோவில்
ஜகத்ரக்ஷக பெருமாள் கோவில் அல்லது வையம் காத்த பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இக்கோவிலுக்கு பல பெயர்கள் உள்ளன, இத்தலத்தை திருக்கூடலூர் என்றும் உள்ளூர் வாசிகள் அடுதுறை பெருமாள் கோவில் என்றும் அழைக்கின்றனர். கும்பகோணத்திற்கு வெளியே அமைந்துள்ளது. திராவிட கட்டிடக்கலையின் அடையாளமாக திகழும் இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவில்களுள் ஒன்றாகும். இங்கு குடி கொண்டிருக்கும் அன்னை இலட்சுமி தேவியை புஷ்பவள்ளி மற்றும் பத்மாசனவல்லி என்று அழைக்கின்றனர்.
இந்து மரபுகளின் படி, இத்தலத்தின் வரலாறாக சொல்லப்படுவது யாதெனில், ஹிரன்யகஷு எனும் அரக்கன் பூமாதேவியுடன் போர் புரிந்து அவரை பாதளத்திற்கு எடுத்து சென்று மறைத்து வைத்து கொண்டான். பூமாதேவியை மறைத்து வைப்பதென்பது மொத்த வையகத்தையே மறைத்து வைப்பதற்கு சமமானது எனவே இந்த ஜகத்தை காக்க விஷ்ணு பெருமான் வராஹ அவதாரம் எடுத்து, நிலத்தை இரண்டாக பிளந்து ஶ்ரீமுஷ்ணம் எனும் இடம் வழியே பூமா தேவியை மீட்டு வந்தார்.
நிலத்தை பிளந்து உள் புகுந்து பூமா தேவியை மீட்டெடுத்தால் திருமங்கையாழ்வார் இந்த ஊரை புகுந்தனூர் என்று மங்களாசனம் செய்துள்ளார். விஷ்ணு பெருமான் அரக்கனிடமிருந்து இந்த ஜகத்தை காத்து இரக்ஷித்தால் ஜகத் ரக்ஷகர் என்றும் வையத்தை காத்ததால் வையம் காத்த பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் உள்ள ஜகத் இரக்ஷகருக்கு அருகே ஓர் இடைவெளி தென்படுகிறது. இது பூமியின் மையப்பகுதி என்று நம்பப்படுகிறது அனைத்து தேவாதி தேவர்களும் இங்கே கூடி இறைவனை வழிபடுகின்றனர். அனைத்து தேவர்களும் இங்கே கூடுவதால் இந்த இடத்திற்கு திருக்கூடலூர் என்ற பெயரும் உண்டு.
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் அய்யம்பேட்டை என்ற இடத்திற்கு நான்கு கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆரம்பத்தில் சோழர்களால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் விஜயநகர அரசர்களாலும் மற்றும் மதுரை நாயக்கர்களாலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். புஷ்பவள்ளி அம்மையார் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். ராமானுஜர், ஆழ்வார், ஆண்டாள் மற்றும் கருடன் ஆகியோருக்கு இங்கே தனித்தனியே சந்நிதிகள் உண்டு. இங்கிருக்கும் ரதத்திற்கு அம்பரிஷ ரதம் என்று பெயர். நவகிரகங்களில் ஓன்றான கேதுவுடன் தொடர்புடைய கோவிலாகும் இது.
Image : Anarghyaa