யோகங்களின் வகைகள் என்ன?
யோகா என்பதின் அர்த்தமே அடிப்படையில் ஒன்றிணைவது என்பதுதான். மனம், உடல், ஆன்மா என்று நாம் நினைகின்றவைகளை நம் விழிப்புணர்வால் ஒன்றிணைப்பதே யோகம் எனப்படும். இந்த யோகத்தில் பல வகைகள் இருக்கின்றன. இந்த யோகா கலை இந்தியாவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. உடல் மனம் சார்ந்த நூற்றுக்கணக்கான யோகா முறைகள் இருக்கின்றன. மூன்று முக்கியமான யோகா முறைகளை பார்ப்போம்.
ஹத யோகம்
ஹத என்பது சூரியன் மற்றும் சந்திரனை குறிப்பது. இது நமது இடது மற்றும் வலது நாசியில் செல்லும் சுவாசத்தை குறிக்கும். நாம் சுவாசிக்கும் பிராணனை உடலில் உள்ள செல்கள் எல்லாம் சுவாசிக்குமாறு செய்வதே ஹத யோகத்தின் அடிப்படையாகும். இதில் மூச்சுக்காற்றை கவனித்த வாறே உடல் அசைவுகள் மற்றும் பயிற்சிகள் இருக்கும். இந்த யோகம் மிக கடினமானதாகும். இதில் தேர்ச்சிபெறுவதற்கே ஒருவருக்கு பல ஆண்டுகள் ஆகும்.
குண்டலினி யோகா
இந்த யோகா உடலில் உள்ள நாடிகளின் சக்திகளை ஒன்றிணைத்து சக்தி பிரவாகமாக முதுகுக்குத்தண்டின் கீழ் பகுதியில் உள்ள ஆற்றலை மேல் எழுப்ப பயிற்றுவிக்கும் யோகா முறையாகும். இன்று இந்த யோகா முறை உலகெங்கிலும் பிரபலமாக உள்ளது. இந்த குண்டலினி சக்தி எழும்பப்பெற்றவர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாகவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் செய்பவர்களாகவும் இருப்பார்கள். குண்டம் என்பது ஒரு பாத்திரத்தை போன்ற அமைப்பை குறிக்கும் சொல், நமது முதுகு தண்டில் உள்ள உயிர் சக்தியானது பாம்பு போல் சுருண்டு இருப்பதாக சீடர்கள் கூறுகிறார்கள் . பல தெய்வங்கள் மற்றும் சித்தர்கள் தலைக்கு மேல் பாம்பு படம் எடுத்து நிற்பது போல் வரைந்திருப்பதை நாம் பரவலாக காண முடியும் அது குண்டலின் ஆற்றல் மேலெழுவதற்கான குறியீடாக கருதப்படுகிறது. இவர்கள் குண்டலினி சக்தி எழும்ப பெற்றிருக்கிறார்கள் என்று பொருள்.
ராஜ யோகம்
இந்த யோகா முறையில் ஆசனங்களையும் உடற் பயிற்சிகளையும் விட தியான முறையே அதிகமாக கற்றுத்தரப்படும். கவனத்தை எங்கு குவிப்பது, கைகளை எந்த முத்திரையில் வைப்பது, தியானம் கைகூட எந்த விதமான உத்திகளை கையாள்வது போன்றவைகள் இதில் கற்றுத்தரப்படும், இது குறிப்பிட்ட குருமார்களுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது. ஆன்மீக பயிற்சிகளில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியவர்களே இந்த பாதையில் பயணிக்க முடியும். சுவாமி விவேகானந்தர் இந்த ராஜா யோகத்தை அதிகமாக வலியுருத்தி இருக்கிறார்