விடாத வினைகளை விரட்டி அடிக்கும் விநாயகர் சதுர்த்தி!
சந்தோஷங்கள் வந்து சேரவும் தீராத வினைகள் எல்லாம் தீரவும் ஆனைமுகப்பெருமானை வழிபடும் விநாயகர் சதுர்த்தி நாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறோம்.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடுவோம். இந்த வருடம் புரட்டாசி 1-ஆம் தேதி பகல் 11:30 மணிக்கு மேல் வரும் சதுர்த்தி, மறுநாள் செவ்வாய் காலை 11 . 46 மணி வரை உள்ளது . அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே அவர் கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர். பிள்ளையார் மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார் , சாணத்திலும் காட்சி கொடுப்பார் . வீட்டிலும் வழிபாடு செய்யலாம்.
ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம் . அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும் .துன்பங்கள் தூர விலகி ஓடும். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் அப்பம், கொழுக்கட்டை, சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து அவருக்கு பிடித்த அருகம்புல், வன்னியிலை , வில்வ இலை, எருக்கம்பூ மல்லிகை பூ ,செண்பகப்பூ ஆகியவற்றையும் வைத்து வழிபட வேண்டும்.
அவருக்கு முன்னால் தோப்புக்கரணம் போட்டு தலையில் கொட்டிக் கொள்வது வழக்கம் . தோர்பி கர்ணம் என்பது தான் தோப்புக்கரணம் என்று ஆனது. கைகளினால் காதை பிடித்துக் கொள்ளூதல் என்பது இதன் பொருள். கஜமுகாசூரன் என்ற அரசனுக்கு முன்னால் தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டி கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் அதே தோப்புக்கரணத்தை போட்டனர். அந்தப் பழக்கமே இப்பொழுது நடைமுறைக்கு வந்ததாக சொல்வர்.