பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் நெய்குப்பை சுந்தரேஸ்வரர்!
அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் கணவன் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த கணவன் மனைவியும் வணங்க வேண்டிய தலம் நெய்குப்பை சுந்தரேஸ்வரர் சுவாமிகள் வீற்றிருக்கும் திருத்தலம்.
அன்னை பார்வதிக்கு ஒருநாள் திடீரென்று ஒரு ஆசை உண்டானது.பந்து விளையாட வேண்டும் என விரும்பினாள் அன்னை பார்வதி. தனது ஆசையை சிவபெருமானிடம் கூறவே சிவபெருமான் உடனே நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார் . பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாட தொடங்கினாள் . நேரம் கடந்து கொண்டே இருந்தது .ஆட்டம் முடியவில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்று எண்ணிய சூரியன் அஸ்தமிக்க தயங்கி நின்றான்.
கோபம் கொண்ட சிவபெருமான் பார்வதிக்கும் தன் கடமையை செய்ய தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார். தேவியை பசுவாகும் படி சிவபெருமான் சாபமிட்டார். இதை அடுத்து தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாக பின் தொடர பூலோகம் வந்தாள்.பந்து வந்து விழுந்த கொன்றைக்காட்டில் சுயம்புலிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒருநாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட தேவி சுய உருவம் பெற்றாள்.
சாபம் நீங்க பெற்ற அன்னையின் முன் தோன்றிய இறைவன் "நீ சுயரூபம் பெற்று விட்டாய். எனினும் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்து என்னை வந்தடைவாய்" எனச் சொல்லி மறைந்தார் .உமையவள் இறைவனை பால் கொண்டு அபிஷேகம் செய்த தலம் பந்தனை நல்லூர் . இது தற்போது பந்தநல்லூர் என்று அழைக்கப்படுகிறது .பார்வதி தேவி இறைவனுக்கு ஊற்றி வழிபட்ட பால் அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய் குப்பை என்ற தலம் வரை ஓடி வந்து நெய்யாக மாறியது .அன்னை பார்வதி அந்த நெய்யை கொண்டு இங்குள்ள இறைவனை பூஜித்தாள். அந்த தலமே நெய் குப்பை திருத்தலமாகும் .