ஏற்றமிகு வாழ்வு தரும் ஏகவுரி அம்மன்!

முற்காலச் சோழர்களால் அமைக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரி அம்மன் கோவில் . சோழர்களின் குலதெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள் தான் இந்த ஏகவுரி அம்மன்.

Update: 2024-05-15 11:43 GMT

தஞ்சாசுரன் என்னும் அசுரன் தஞ்சையில் வாழ்ந்தான். சிறந்த சிவபக்தனான அவன் கடும் தவம் புரிந்தான். தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பெண்களைத் தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாத வரம் வேண்டும் என்று வரம் கேட்டான் தஞ்சாசுரன்.இறைவன் சிரித்தார். 'அப்படியானால் உன்னை பெண் ஒருத்தி வென்றால் பரவாயில்லையா ?'என கேட்டார். அதற்கு தஞ்சாவூர் ஆண்களை வெல்ல பெண்களால் முடியாது அதனால் தான் அப்படி ஒரு வரம் கேட்டேன் என்றான். பெண்ணை கேவலமாக நினைத்த தஞ்சாசுரனுக்கு தன்னில் பாதியாக இருந்த பார்வதி தேவி மூலம் பாடம் புகட்ட எண்ணினார் இறைவன்.

அப்படியே ஆகட்டும் உன்னை ஒரு பெண்ணைத் தவிர யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை வழங்கினார். வரம்பெற்ற ஆணவத்தில் மனிதர்களையும் தேவர்களையும் இம்சிக்க தொடங்கினான் தஞ்சாசுரன் தேவர்கள் அழுதபடி சிவனை சரணடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிவன், 'பெண்மையே சக்தி என அறியாதவன் தஞ்சாசுரன்.அவன் அழியும் நேரம் வந்துவிட்டது.கலைப்படாதீர்கள்.பின்னர் பார்வதி தேவியை அழைத்து அசுரனை அழிக்க ஆணையிட்டார்.

அசுரனின் அக்கிரமங்களை அறிந்த தேவியின் முகத்தில் உக்கிரம் ஏற எட்டு கரங்களிலும் ஆயுதம் ஏந்தி அசுரனை நோக்கி புறப்பட்டாள். அசுரனுக்கும் தேவிக்கும் கடும் போர் மூண்டது. முடிவில் அசுரனை வதம் செய்தாள் தேவி.உயிர் பிரியும் நேரத்தில் அசுரன் தேவியை பணிந்து பெண்மையை இழிவாக பேசிய என்னை மன்னிக்க வேண்டும் என்றும் இந்த பகுதி என் பெயரால் தஞ்சாபுரி என வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டினான். தேவியும் அப்படியே ஆகட்டும் என்று வரம் அளித்தார் .

எருமைக்கிடி உருவம் தாங்கிய அசுரனை கழுத்தை வெட்டி தலையை ஒரு கையில் ஏந்தினாள். உடல் கீழே சாய்ந்ததும் அசுரன் எருமை உருவம் நீங்கி இறந்தான். அசுரனை வதம் செய்த பின்னரும் அன்னையின் உக்கிரம் குறையவில்லை. மாங்காளி வனம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அலைந்து திரிந்தாள். அதனால் நீர் நிலைகள் வறண்டன .வனமெங்கும் தீப்பற்றி எரிந்தது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான் ஏகவுரி அம்மனிடம் சாந்தம் கொள் என்றார். அம்மனின் கோபம் சற்று தணிந்தது.

சிவபெருமான் கோபத்தைத் தணித்துக் கொண்டு அப்பகுதி மக்களுக்கு தெய்வமாக இருந்து காப்பாற்றும் படி கூறினார் .வறட்சி பஞ்சம் நீங்கியது. அப்போது மக்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருள வேண்டும் என கேட்டுக்கொண்டனர் .மக்களின் வேண்டுகோளின் படி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இன்றளவும் அருள் பாலித்து வருகிறார் .அம்மன் அசுரனை வதம் செய்தது ஒரு ஆடி கடைசி வெள்ளிக்கிழமை எனவே அன்றைய நாளில் மக்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனை சாந்தப்படுத்துகின்றனர் .தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் தஞ்சையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வல்லம் என்ற ஊர். இங்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஆலக்குடி சாலையில் ஒரு கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

Similar News