ஏரிக்குள் இருந்து தானாகவே மேல் எழும்பி வந்த கோப்பினேஸ்வரர்!
ஏரி தண்ணீரில் இருந்து தானாகவே வெளிப்பட்ட கோப்பினேஸ்வரர் ஆலயத்தை பற்றி காண்போம்.
மும்பையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நகரம் 'தானே'. மும்பையின் நன்கு வளர்ச்சி அடைந்த புநகர்பகுதிகளில் ஒன்றாகவும் இந்த நகரம் திகழ்கிறது. இங்கே சுற்றிலும் கடைகளும் காய்கறி மண்டிகளும் சூழ்ந்த ஒரு நெருக்கடியான வீதியில் அமைந்திருக்கிறது. பழம்பெருமை வாய்ந்த கோப்பினேஸ்வரர் திருக்கோவில் 1240 ஆம் ஆண்டு வரை தானே பகுதி ஆட்சி செய்த சில்கார வம்ச அரசர்கள் இந்த கோவிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த வம்சத்தை சேர்ந்த அரசர்கள் சிறந்த சிவ பக்தர்களாகவும் இருந்துள்ளனர். கிபி 1760 ஆம் ஆண்டு மராட்டிய மன்னர் சார் சுபேதார் ராமோஜி மகாதேவ் என்பவர் இந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்து கட்டி இருக்கிறார். அதன் பின்னர் 1879 ஆம் ஆண்டு பொதுமக்களால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. சந்தை வீதியில் நின்று பார்த்தால் இந்த ஆலயத்தை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் ஆலயத்தின் நுழைவு வாசல் மிகவும் குறுகலான தலைவாசல் ஆகியவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளது. சாதாரணமாக அந்த வீதியில் செல்லும்போது அதுவும் ஒரு கடை என்பது போல் கடந்து சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. நன்றாக உற்று நோக்கும்போது தான் அது ஒரு ஆலயம் என்பதை உணர முடியும்.
ஆனால் நுழைவு வாசலை கடந்து உள்ளே சென்றால் அந்த ஆலயத்தின் பிரம்மாண்டமே வேறு விதமாக நம்மை வியக்க வைக்கும். அந்த அளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் ஆலயங்களில் ஒன்றாக இந்த கோப்பினேஸ்வரர் கோவில் திகழ்கிறது. கோவிலுக்குள் நுழைந்ததுமே மிகப்பெரிய நந்தி வரவேற்கிறது. அதை வணங்கி சென்றால் மகா மண்டபத்தை அடையலாம். ஆலயத்தில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளின் போதும் இந்த மண்டபத்தில் சொற்பொழிவுகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இந்த மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள சில படிகளை இறங்கிச் சென்றால் இத்தல இறைவனான கோப்பினேஸ்வரர் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்தி5 அடி உயரம் 50 சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கமாகும்.