இந்து நாள்காட்டியின் ஏழு நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏழு நாட்களுக்கு உரிய ஏழு தெய்வங்கள் உண்டு. திங்கள் கிழமை அல்லது சோமவாரம் எனப்படும் வாரத்தின் முதல் நாள் சிவனுக்காக அர்பணிக்கப்பட்டது. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை இந்த நாளில் "ஓம் நமசிவாய "எனும் மந்திரம் கொண்டோ அல்லது மஹா மிருத்யுஞ்செய ஸ்தோத்திரத்தை சொல்லியோ வணங்கலாம்.
செவ்வாய்கிழமை அனுமருக்கான தினமாக கருதப்படுகிறது. மஹாராஷ்ட்ரா போன்ற வடஇந்திய பகுதிகளில் செவ்வாய் கிழமை விநாயகருக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. விநாயகரை மங்கள் கர்தா என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் 40 பத்திகளை கொண்ட அனுமன் சலிசா எனும் அனுமன் மந்திரத்தை சொல்லலாம். மற்றும் விநாயகரை வழிபடுவோர், அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம்.
புதன் கிழமை அல்லது புதுவாரம் எனப்படும் இந்நாள் கிருஷ்ணருக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் துளசி இலைகளை கிருஷ்ணருக்கு அர்பணித்து ஹரே கிருஷ்ண பஜனைகளை மேற்கொள்ளலாம். வட இந்தியாவில் ஒரு பழமொழி உண்டு, "புத் சப் காம் சுப்ப் "என்கிறார்கள் அதாவது இந்த நாளில் துவங்கும் காரியம் வெற்றியடையும் என்கிறார்கள். இதை தான் நம் வழக்கத்தில் "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது " என்கிறோம்.
அடுத்து வியாழக்கிழமை ஒரு சிலர், இதனை பாபாவிற்கான நாளாகவும், கந்தனுக்கு உகந்த நாளாகவும் கருதுகின்றனர். சில இடங்களி அனுமரை வணங்குவதும் உண்டு. வெள்ளிக்கிழமை என்பது வாரத்தின் ஏழு நாட்களில் மிக மங்களமான நாள். இந்நாள் இலட்சுமி தேவிக்கு உகந்ததாகவும் இதர செல்வம், வளம், செள்பாக்கியம் ஆகியவற்றின் அம்சமாகவும் திகழ்கிறது. நல்ல காரியங்களை வெள்ளிக்கிழமைகளில் துவங்குவதை மிக நல்ல சகுனமாகவும், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தை பிறப்பது மிக சிறப்பானதாகவும் கருதப்படுகிறது.
சனிக்கிழமை என்பது பெயரே உணர்த்துவதை போல சனிபகவானுக்கு அர்பணிக்கப்பட்ட தினமாகும். மேலும் இந்த நாள் அனுமரையும், விஷ்ணு பெருமானையும் வணங்க உகந்த தினமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் பரிகாரமாக நவகோள்களை வணங்கும் தினமாக இந்த நாள் கருதப்படுகிறது.
அடுத்து ஞாயிற்றுகிழமை சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் பைரவரை வணங்கி வழிபடுவது சிறப்பானாதாக கருதப்படுகிறது. இதில் நாம் வணங்கி வழிபடும் தெய்வத்திற்கான விரதம் இருக்கும் நாளில், விரதம் இருப்பது வழக்கமாக இருக்கிறது.
Image : Free Art