ஆசி வாங்கும் போதும், ஆசி வழங்கும் போதும் இருவருக்கும் இடையில் ஒருவித ஆற்றல் வளையம் உருவாகிறது !
நம் முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு செயலுக்கு பின்னும் அறிவியல் மற்றும் ஆன்மீக தார்பரியம் அடங்கியிருக்கிறது.
நம்மை விட வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது நம் தொன்று தொட்ட பாரம்பரியங்களுள் ஒன்று. மேலை நாடுகளில் இந்த முறைக்கு பரவலான வரவேற்பு இல்லை. காரணம் அவர்கள் இதனை தங்களின் சுய கெளரவத்துடன் அடையாளப்படுத்தி பார்ப்பதாலும், சுயமரியாதை இல்லாத விஷயம் என ஒரு சிலர் கருதுவதாலும் ஒரு சில வழக்கங்களில் இந்த முறையில் ஆசி பெறுவதில்லை.
ஆனால் நம் நாட்டில் அனைத்திற்கு பின்னும் காரண காரியங்கள் உண்டு. நம் முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு செயலுக்கு பின்னும் அறிவியல் மற்றும் ஆன்மீக தார்பரியம் அடங்கியிருக்கிறது. ஒரு மனிதரின் மொத்த எடையையும் தாங்கி நிற்கிற பாதத்தில் ஒருவர் பணிகிற போது பணிபவரின் அகங்காரம் அழிகிறது. அவருடைய நான் எனும் தன்மை அங்கே அழிந்து போகிறது.
ஆன்மீகத்தில் உயர்வான நிலையை ஒருவர் அடைய வேண்டுமெனில் முதலில் அழியவேண்டியது அகங்காரம். எப்போது நான் என்கிற தன்மை அழிகிறதோ அங்கே முக்திக்கான முதல் படி துவங்கும். இதற்கான ஒரு செயல்முறையாக நம் முன்னோர்கள் நம்மை விட மூத்தவர்களின் காலில் விழுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் இவ்வாறு ஒருவரை வணங்குகிற போது வணங்கப்படுபவரின் வயது, ஞானம், சாதனை, அனுபவம் ஆகிய சகலவிதமான நல்லாற்றலையும் நாம் வணங்குகிறோம்.
இவ்வாறு அவர்களுக்கு நாம் அளிக்கிற மரியாதையில், நன்றியில் அவர்கள் மனம் குளிர்ந்து எழும் நல்லாற்றலே நம்மை ஆசியாக வந்து அடைகிறது. அடிப்படையில் ஆசி என்பது ஒருவரின் நல்லாற்றல் நமக்கு பகிர்ந்தளிக்கப்படுவதே ஆகும். இந்த மரியாதை வயதில் மூத்தவர்கள் என்பதற்காக மட்டுமே நாம் காலில் விழுவதில்லை. ஆன்மீக குருமார்கள், ஆசிரியர்கள், நம் முன்னோர்கள் பெற்றோர்கள் துறை சார் சான்றோர்களின் காலிலில் விழுவது ஒரு வழக்கமாகவே உள்ளது.
ஆசி வாங்கும் போதும், ஆசி வழங்கும் போதும் இருவருக்கும் இடையில் ஒருவித ஆற்றல் வளையம் உருவாகிறது. குறிப்பாக ஆசி வழங்குவோர் வாங்குவோரின் தலையில் கைவைத்து ஆசி வழங்குவது வழக்கமாக இருக்கிறது. இதன் பொருள் அவரிடம் இருக்கும் நல்லாற்றலை ஆசி வாங்குபவருக்கு அவர் வழங்குகிறார் என்பதே ஆகும். இதனை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் ஒருவருக்கு மரியாதை செய்வதும், நன்றியை வெளிப்படுத்துவதும் நல்லறமாகும். இந்த நல்லறத்தை ஒருவர் பயிற்சி செய்ய நமக்கு மூத்தோரிடம் ஆசி பெறுவது ஒரு வகையாகும்.
Image : Astro Ulagam