ஏகாதசி விரதம் தோன்றிய வரலாறு!

ஏகாதசி விரதம் தோன்றிய சுவாரஸ்யமான புராதன வரலாறு குறித்து காண்போம்.

Update: 2023-12-21 05:45 GMT

கிருதா யுகத்தில் நதிஜெஸ் என்ற மகாசுரன் இருந்தான். அவனுக்கு முரண் என்ற மகன் பிறந்தான். அவன் கடுந்தவம் செய்து மிகப்பெரும் சக்திகள் பெற்று தேவர்களையும் மக்களையும் சகல ஜீவன்களையும் துன்புறுத்தி வந்தான். முரணை அழிக்க வேண்டும் என்று சகல முனிவர்களும் தேவர்களும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் முரண் முன்பாக தோன்றி உன் தவறுகளுக்கு நீ வருந்துவாய் என கூறி அவனோடு கடும் யுத்தம் செய்தார். ஆனால் அவனை அழிக்க முடியவில்லை.


அப்போதுதான் முரணின் அழிவு ஒரு பெண்ணால் தான் ஏற்படும் என்பதை விஷ்ணு அறிந்தார். எனவே அவர்  குகையில் யோக நித்திரையில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில் விஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு அழகான பெண் தோன்றினாள். அவள் முரணுடன் போரிட்டு அவனை எரித்துக் கொன்றாள். முரணுடன் போரிட்ட விஷ்ணுவிடம் இருந்து பதினோராம் நாள் தோன்றியதால் அந்தப் பெண் ஏகாதசி என்று அழைக்கப்பட்டாள். அவளிடம் விஷ்ணு உனக்கு என்ன வரம் வேண்டுமோ அதை கேட்டு பெற்றுக்கொள் என்றார்.


அப்போது ஏகாதசி முரண் அழிந்த இந்த தினத்தில் யார் உங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டாடுகிறார்களோ விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் மாற்றத்தை அருள வேண்டும் என்று கேட்டாள். அவ்விதமே விஷ்ணுவும் அருளினார். அதனாலேயே ஏகாதசியும் அந்த நாளில் இருக்கும் விரதமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு சமயம் துர்வாசமுனிவர் ஒவ்வொரு தேசமாக சென்று கொண்டிருந்தார். துர்வாசருக்கு ஆயிரம் சீடர்கள் உண்டு. தவத்தில் சிறந்தவ.ர் அவர் சொன்னால் அது நடக்கும். அவரிடம் உள்ள ஒரே குறை கோபம் தான். கோபம் வந்தால் அது சாபமாகத்தான் வெளிப்படும்.


அப்படிப்பட்ட துர்வாசர் அம்பரீஷ் மகாராஜா ஆளும் தேசத்தை அடைந்தார். அம்பரீஷ் மகாராஜா விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டவர். அவரது அரண்மனையில் தன்னுடைய சீடர்களுடன் வந்து தங்கினார் துர்வாசர். அன்று அம்பரீஷ் மகாராஜா ஏகாதசி விரதத்தை கடைபிடித்து கொண்டிருந்தார். மறுநாள் காலை துவா திசையில் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் சீடர்களுடன் நதிக்கு நீராட சென்று விட்டார். காலையில் துவாதசி பாரணையை முடிக்க வேண்டிய அவசரம் அம்பரீஷ மகாராஜாவுக்கு. துர்வாசரோ நாம் நிதானமாக போகலாம் மகாராஜாவாக இருந்தால் என்ன காத்துக் கொண்டிருக்கட்டும் .நாம் போவதற்கு முன் துவாதசி பாரனையை பூர்த்தி செய்து விடுவாரா என்ற ஆணவத்தில் இருந்தார்.


விஷ்ணுவின் தீவிர பக்தரான அம்பரீஷ் மகாராஜா ஏகாதசி விரதத்தை பூர்த்தி செய்யாவிட்டால் இத்தனை ஆண்டு காலமாக கடைபிடித்து வரும் விரதத்தில் தடை ஏற்படுமே என்ற அச்சத்தால் கலங்கினார். ஒரு கட்டத்தில் துவாதசி பாரணையை முடித்து விடலாம் என்று தீர்மானித்தார். அதே நேரத்தில் உணவு உண்ணாமல் பெருமாளுக்கு சமர்ப்பித்த துளசி தீர்த்தத்தை மட்டும் உட்கொண்டார். சாப்பிடவும் இல்லை. விரதம் முடிந்து விட்டது. இந்த நிலையில் வெகு தாமதமாக வந்த துர்வாசருக்கு துளசி தீர்த்தத்தை உட்கொண்டு அம்பரீஷ் மகாராஜா ஏகாதசி விரதத்தை முடித்தது தெரியவந்தது.


விருந்தினர்களுக்கு உணவளிக்காமல் நீ எப்படி சாப்பிடலாம் அதை நீ செய்திருக்கக் கூடாது என்று கடுமையாக கோபப்பட்டவர் தன் தலைமுடியில் இருந்து ஒரு முடியை எடுத்து வீசி எறிந்தார். அது மிக உயரமான கருத்த உருவமுள்ள பூதமாக மாறியது. அம்பரீஷ் மகாராஜா திகைத்தார் . நமக்கு பகவான் திருவடியே கதி வேறு இல்லை என்று விஷ்ணுவின் நாமத்தை சொல்ல ஆரம்பித்தார். அதே நேரம் பூதம் அம்பரீச மகாராஜாவே விழுங்க அவர் அருகில் வந்தது .


'ஓம் நமோ பகவதே வாசுதேவாய'  'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்று அவர் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் அங்கே மிகப் பெரிய ஒளி தோன்றியது. அந்த ஒளியிலிருந்து சுதர்சன சக்கரம் வெளிப்பட்டது. தன் அடியார்களுக்கு வரும் துன்பத்தை ஆண்டவன் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார். சுதர்சன சக்கரத்தில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு பூதத்தை எரித்தது. அதோடு இல்லாமல் பூதம் வெளிப்படுவதற்கு காரணமாக இருந்த துர்வாசரை சுதர்சன சக்கரம் துரத்தியது.


அதற்கு பயந்து துர்வாச முனிவர் பூலோகம், புவர்லோகம், சுவர் லோகம் மகா லோகம் ,தபோலோகம் இந்திரலோகம் என ஒவ்வொரு லோகமாக ஓடி வைகுண்டம் சென்று பகவானின் திருவடியை சரணடைந்தார். விஷ்ணு பகவான் ஆண்டவனுக்கு செய்யும் அபச்சாரங்களை அடியார்களுக்கு செய்யும் தொண்டால் போக்கிக் கொள்ள முடியும். ஆனால் அடியார்களுக்கு கெடுதல் நினைத்தால் அவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. துர்வாசரே நீ அம்பரீஷ மகாராஜாவை சரணடை என்றார். துர்வாசர் வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு நேராக அம்பரீச மகாராஜாவின் அரண்மனையை அடைந்தார். அம்பரீஷா எனது ஆணவத்தை பொறுப்பாய். எவ்வளவோ தவம் செய்தோம் என் தவமெல்லாம் உனது ஏகாதசி விரதத்தின் முன் பலனற்று போய்விட்டது.


பகவான் அடியார்களின் சக்தி என்ன என்று எனக்கு தெளிவாக புரிந்து விட்டது. சுதர்சன சக்கரம் என்னை துரத்திக்கொண்டு வருகிறது. நீதான் என்னை காக்க வேண்டும் என்றார். உடனே அம்பரீஷ் மகாராஜா விஷ்ணுவின் ஸ்லோகத்தை கூறி தியானம் செய்தார். உடனே சுதர்சன சக்கரம் விலகிச் சென்றது. பின் அம்பரீஷ மகாராஜா துர்வாச முனிவரை நல்ல முறையில் கவனித்து உணவு அளித்து வழி அனுப்பி வைத்தார். வைகுண்ட ஏகாதசியை கடைப்பிடிப்பவர்கள் அந்த விரதத்தின் போது ஓம் 'நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை தன் சக்திக்கு ஏற்ற வகையில் 28 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

Similar News