இருளை நீக்கி பிரகாசமான வாழ்வருளும் தக்‌ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வது எப்படி

Update: 2022-10-06 01:00 GMT

இந்து மரபில் குரு வழிபாட்டிற்கு என்று தனியாக முக்கியத்துவம் உண்டு. "குருவே சிவம் என கூறினன் நந்தி" என்று வழிபடுபவர் நாம். குருவையே சிவனாக கருதுவது நம் மரபாகும். அதன்படி தக்ஷிணாமூர்த்தி நம் மரபில் உட்சபட்ச குருவாக கருதப்படுபவர். அறியாமை எனும் இருளை அகற்றி ஞானத்தை நல்கும் இறைவன் இவர். சிவபெருமானின் பல்வேறு வெளிபாடுகளில் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான வெளிப்பாடு இது.

ஒரு மனிதன் எப்போது தனக்குள் இருக்கும் மூன்று தீய குணங்களான மாயை, அகங்காரம் மற்றும் தீய பண்புகளை உதறுகிறானோ அவனுக்கு இறைவனின் அருள் கிட்டுகிறது எனும் ஞானத்தை புகட்டுபவர் தக்ஷிணாமூர்த்தி. இன்று ஏராளமான சிவாலயங்களில் இவருக்கென்று தனி சந்நிதிகள் இருந்தாலும், இவரே மூலவராக எழுந்தருளும் இந்தியாவில் வெகு சிலது மட்டும் தான் உள்ளது.

குறிப்பாக பன்னிரண்டு ஜோதிர்லிங்களுள் ஒன்றான உஜ்ஜைனியின் மகாகாலேஸ்வரர், கேரளாவின் வைக்கம் பகுதியில் உள்ள மகாதேவர் ஆலயம் மற்றும் தமிழகத்தில் கும்பகோணம் பகுதியில் உள்ள ஆலங்குடியில் இறைவன் லிங்க ரூபத்தில் இருந்தாலும் அவருடைய திருநாமம் தக்ஷிணாமூர்த்தி என்றே உள்ளது. இவ்வாறு வெகு சில ஆலயங்களில் மட்டுமே இவர் மூலவராக அருள் பாலிக்கிறார்

அதுமட்டுமின்றி தஞ்சை திருபந்துறையிலும், திருப்புலிவனத்திலும் அர்த்தநாரீஸ்வரர்ர் வடிவில் தக்ஷிணாமூர்த்தி காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இல்லங்களில் தக்ஷிணாமூர்த்தியின் திருவுருவம் அல்லது திருவுருவ படத்தை வைத்து வழிபடுவது நல்லது. அவ்வாறு அவரை வீட்டிலோ அல்லது பூஜையறையிலோ வைக்கும் போது தெற்கு முகமாக வைத்து வழிபட வேண்டியது அவசியம்.

திருவுருவச்சிலையை வைத்திருப்பவர்கள் அவருக்கு அன்றாடம் ருத்ரா அபிஷேகம் செய்வது நல்லது. மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவருக்கு கொண்டை கடலை மாலை சாற்றி அவரின் ஸ்லோகமான வர்ணமால சதகம் படித்து பூஜித்து வர வீட்டில் நல்ல ஞானமும், அருளும் பெருகும் என்பது ஐதீகம்.

தெற்கு முகமாக ஆலமரத்தின் அடியில் ஆழ்ந்த தியான நிலையில் இருப்பதை போன்றே இவருடைய திருவுருவம் அமைந்திருக்கும். ஆழ்ந்த தியான நிலையில் இருக்கும் அவர் முகத்திலிருந்து ஆனந்தம் பிரவாகம் எடுத்து செல்வதை தீவிர பக்திநிலையில் இருக்கும் எவரும் அறிய முடியும். கல்வி, கலைகள், யோகம் என அனைத்திற்கும் மூலவராக திகழும் தக்ஷிணாமூர்த்தி வணங்கி வர சகல பாவங்களும் தொலையும், அனைத்து இருளும் விலகும் நல்லொளி பெருகும்.

Tags:    

Similar News