ஆன்மீகத்தின் மூலம் கோபத்தை வெல்வது எப்படி? ஆச்சர்யமூட்டும் தகவல்

Update: 2021-04-30 23:45 GMT

ஆன்மீக அறிவு மற்றும் தியானம் இந்த இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களை போல. இன்றைய நவீன உலகில் ஆன்மீக தகவல்கள் நம் விரல் நுனியில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அந்த தகவல்களை வெறும் தகவல்களாக எடுத்து கொள்கிறோமா அல்லது அவற்றை பயிற்சி செய்து நமக்கான நன்மையாக மாற்றி கொள்கிறோமா என்பது தான் கேள்வி.



 ஒரு மருத்துவர் தனக்கு கிடைத்த அறிவினை வைத்து பல கடினமான அறுவை சிகிச்சைகளை செய்கிறார். ஒரு வழக்குறைஞர் தன் அறிவினை கொண்டு வாதங்களின் மூலம் பல வழக்குகளை வென்றெடுக்கிறார். ஒரு பொறியாளர் திறம்பட கட்டுமானங்களை நிர்மாணிக்கிறார். எனவே எப்போது ஒன்று பயிற்சி செய்யப்படுகிறதோ அப்போது தான் அது அறிவாக மாறுகிறது. அதுவரை அது தகவல் மட்டுமே. அதைபோலவே ஆன்மீக தகவல்களை அறிந்து கொள்ளுதல் என்பது வேறு அது பயிற்சி செய்யப்படுவதென்பது வேறு. ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்வதன் அடிப்படை நோக்கமே நம்மை உட்புறம் நோக்கி பயணிக்க செய்வது தான். எனவே எப்போது ஆன்மீக தகவல்கள் அல்லது பயிற்சிக்கான வழிமுறைகள் கிடைக்கபெறுகிறோமா அதை வாழ்வில் பயிற்சி செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

கோபம் கொண்டால் அது உடலளவிலும், மனதளவிலும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது நாமறிந்த தகவல். இந்த அடிப்படை தகவல் தெரிந்தும் நாம் கோபம் கொள்கிறோம் என்ன காரணம். நம்மிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான போதுமான ஆன்மீக ஆற்றல் உட்புறத்தில் இல்லை. எனவே ஆன்மீக ஆற்றல் இல்லாத ஆன்மீக அறிவு என்பது வீண். ஆன்மீக அறிவை பயன்படுத்துவதற்கான போதிய பக்குவத்தை தியானத்தின் மூலமும் இதர ஆன்மீக பயிற்சிகளின் மூலமும் தான் பெற முடியும்.


எண்ணங்கள் மனதில் தோன்றலாம். ஆனால் ஞானம் என்பது அறிவின் முதிர்ச்சியில் ஏற்படுவது. ஆன்மீக பாதையில் ஓருவர் வெற்றி கொள்ள தெளிவான மனமும், தெளிந்த சிந்தனையும் அவசியம். மிக எளிமையாக சொன்னால் நம்முடைய கடந்த கால கதவுகளை மென்மையாக அடைக்க வேண்டும். எனக்கு ஏன் நிகழ்ந்தது, எனக்கு ஏன் இவ்வாறு ஆனது போன்ற "ஏன் "கேள்விகளிலிருந்து வெளியேறுங்கள். எத்தனை தூரம் கடந்த காலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறீர்களோ அத்தனை தூரம் நீங்கள் வலுவிழந்து போவீர்கள்.

எப்போது நம் மனதை நல்ல சிந்தனைகளால் நேர்மறை எண்ணங்களால் நிரப்புகிறீர்களோ அப்போது மனம் தெளிவடையும். உங்கள் அறிவு ஒளியால் மிளிரும். எப்போது நன்மை மட்டுமே மனதில் நிறைந்திருக்கிறதோ, அப்போது ஆன்மீக ஆற்றலை ஈர்பதற்கான வலிமை அதிகம். எப்போது ஆன்மிக்க ஆற்றல் பெருகிறதோ அப்போது கோபத்தை ஏன் வெல்ல வேண்டும் என்கிற ஞானம் நமக்கு ஏற்படுகிறது.

எனவே நம்மை இறை அதிர்வுகளால் நிறைத்து கொள்வோம். அதுவே நாம் வெறுமனே பெற்ற ஆன்மீக தகவல்களை ஆன்மீக அறிவாக, ஞானமாக மாற்றும்

Tags:    

Similar News