கடவுளுக்கு படைக்கப்பிட்ட பின் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களில் மிகவும் புகழ்பெற்றது திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆகும். இங்கு ஏன் லட்டு வழங்கப்படுகிறது என்பதற்கு அழுத்தமான புராண காரணம் இருந்தாலும். மிகவும் பரவலாக சொல்லப்படும் ஒன்று, இந்த லட்டு பிரசாதம் வெங்கடாஜலபதிக்கு மிகவும் உகந்தது ஆகும்.
திருப்பதிக்கு யாத்திரை சென்றால் இந்த பிரசாதமின்றி அந்த யாத்திரை முழுமையடையாது என்று கூட சொல்லலாம். பிரம்மோட்சவம் நாட்களில் இந்த பிரசாதம் பஞ்சாய் பறந்து தீர்ந்து போவதை கண்கூடாக பார்க்க முடியும்.
இந்த லட்டை ஶ்ரீவாரி லட்டு என்றும் அழைப்பார்கள். திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு நெய்வேத்யமாக வழங்கப்பட்டு பின் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. திருக்கோவிலில் இந்த லட்டு தயாரிக்கப்படும் இடத்திற்கு "பொட்டு " என்று பெயர். இந்த இடம் திருக்கோவிலின் சம்பங்கி பிரதக்ஷணம் எனும் இடத்தினுள் அமைந்துள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 2.8 இலட்சம் இலட்டுகள் இந்த இடத்தில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் ஒரே நாளில் இங்கு 8,00.000 இலட்சம் லட்டுகள் வரை தயாரிக்க கூடும்.
இந்த லட்டின் தனித்தன்மையை குறிக்கும் பொருட்டு இந்த பிரசாதத்திற்கு புவி சார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. நாம் வெறுமனே திருப்பதி இலட்டு என்று பொதுவாக அழைக்கிறோம். ஆனாலும் கூட அதிலும் பல்வேறு வகைகள் உண்டு.
உதாரணமாக ப்ரோக்கதம் லட்டு என்பது பொதுவாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்படுவது. இதன் சராசரி எடை 175 கிராம்கள். இதுவே மிகவும் அதிகமான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் ஒன்று. அடுத்ததாக, அஸ்தனம் லட்டு இது மிகவும் முக்கியான புனித நாட்களில் மட்டுமே தயாரிக்கப்படும். இது அதிகபட்சமாக இதுவரை 750கிராம் எடைவரையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் அதிகமான முந்திரி, பாதாம் மற்றும் குங்கும பூ இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக கல்யாணோட்ஷவ லட்டு. இது கல்யாண உற்சவத்தில் பங்கு பெறும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது மற்றும் அர்ஜித சேவையில் பங்கேற்கும் சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.